Share

Thursday, June 4, 2015

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என்று கலெக்டர் பழனிசாமி கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போட்டி தேர்வுகள்

தமிழகத்தில் படித்துவிட்டு எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., டி.ஆர்.பி., ஆர்.ஆர்.பி. உள்பட பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த விரிவான ஆலோசனை மற்றும் பயிற்சிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது அறிவித்துள்ள 1,241 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தகுந்த பயிற்சி வல்லுனர்களை கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது.

பயிற்சிவகுப்பு

இந்த பயிற்சி வகுப்பு அலுவலக வேலை நாட்களில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்: