Share

Saturday, March 21, 2015

வருமானத்தை அள்ளித்தரும் செராமிக் இன்ஜினியரிங் தொழில்

வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது என்பதால், களிமண் இன்றைய உற்பத்தி உலகின் பல அம்சங்களில் பயன்படுத்தப்படுகிறது. படைப்பாக்க வடிவங்களை நிஜத்தில் உருவாக்குவதற்கு பல புதிய சாதனங்கள் தேவைப்படுகின்றன. செராமிக் பொறியியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் களிமண் தொடர்பான பண்படுத்துதல், மணல் மற்றும் களிமண் போன்ற உலோகமல்லாத மற்றும் உயிரற்ற பொருட்களை பலவித பயன்பாட்டு பொருட்களாக தன்மை மாற்றம் செய்தல் ஆகிய பணிகளை பிரதானமாக செய்வார்கள்.

களிமண் பொறியியல் படித்த ஒருவர், தொழில்நுட்ப மேலாண்மையில் பயிற்சி பெறுபவர், நிர்வாகி, திட்ட மேற்பார்வையாளர், விற்பனை பொறியாளர் அல்லது தொழில்நுட்ப ஆலோசகர் போன்ற நிலைகளில் பணி வாய்ப்புகளை பெறலாம்.

* பணி வாய்ப்புகள்:

தனியார் மற்றும் துறைகளில், செராமிக் பொறியாளர்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. ஆய்வகம், களிமண் பொருள் உற்பத்தி கூடங்கள் போன்றவைகளில் ஆராய்ச்சியாளராக பணியாற்ற முடியும். செராமிக் பொறியியலில், அறிவியல் மற்றும் தயாரிப்பு அம்சங்களில் அனுபவமுடையவர்கள், நிர்வாகிகள், திட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனை பொறியாளர்கள் போன்ற பெரிய நிலைகளிலான பணி வாய்ப்புகளை பெற முடியும்.

சிவில் நியூக்ளியர் களம், எலெக்ட்ரானிக்ஸ் தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவையும், செராமிக் துறையில் அபரிமித பணி வாய்ப்புகளை வழங்குகின்றன. இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர்கள் ஓரிடத்தில் ஊதியத்திற்கு பணிபுரிவதை விட, அத்துறை தொடர்பான புதிய தொழில்களை தொடங்கி, வாழ்வின் புதிய உயரங்களை அடையலாம்.

* சம்பளம்:

புதிதாக படித்து வெளிவருபவர்கள், அரசு மற்றும் தனியார் ஆகிய 2 துறைகளிலும், ஆரம்பத்தில் ரூ.10000 முதல் ரூ.15000 வரையில் ஊதியம் பெறுகிறார்கள். அதே சமயத்தில் அனுபவமுள்ள ஒரு பொறியாளர் மாதம் ரூ.50000க்கும் அதிகமாக சம்பாதிக்க முடியும்.

* பயிற்சி மற்றும் மேம்பாடு:

செராமிக் துறையில் பி.இ, பி.டெக்., பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆகியவற்றில் எந்த ஒன்றை படிக்க வேண்டுமென்றாலும், ஒருவர் தனது பள்ளி படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை கட்டாய பாடமாக கொண்டு குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.

பெரும்பான்மையான கல்லூரிகளில், மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பணிபுரியும் நபர்களுக்கு வேறு சில வாய்ப்புகள் உள்ளன. இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் அமைப்பின் அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வை எழுதி, அதன் மூலம் தொலைநிலைக் கல்வி முறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம்.

* கல்வி நிறுவனங்கள்:

அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி - சென்னை, ஆந்திரா யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - விசாகப்பட்டினம், பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி - வாரணாசி, சென்ட்ரல் கிளாஸ் அண்டு செராமிக் ரிசர்ச் இன்ஸ்டியூட் - கொல்கத்தா, காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி - பிகானிர், கவர்மென்ட் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு செராமிக் டெக்னாலஜி - கொல்கத்தா, எச்.கே.இ. சொசைட்டிஸ் பி.டி.ஏ காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - குல்பர்கா, என்ஐடி - ரூர்கேலா, யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி - கொல்கத்தா போன்றவை செராமிக் தொடர்பான படிப்புகளை வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்  ஆகும்

0 கருத்துரைகள்: