Share

Monday, February 23, 2015

இயலாதவரின் இழி பழக்கங்கள்!

நம்மை வாழ்வில் ஏற்றுவதும் இறக்குவதும் நமது பழக்கங்களே. வாழ்க்கை ஏணியில் முன்னேற நாம் பிடித்துக்கொள்ளும் பலமான கயிறுதான் நம்பழக்கங்கள்.

வெற்றி பெறுவதற்கான பழக்கங்களை முன்பு கண்டோம்... இழிபழக்கங்கள் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா?

இயலாதவர் இறுக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் இழி பழக்கங்கள் ஏழு:

1. எதிர்மறை எண்ணங்கள்: நினைப்பது, பேசுவது செய்வது எல்லாமே நெகடிவ் ஆக இருக்கும். ஒவ்வொரு வாய்ப்பிலும் அவர்கள் கண்ணில்படுவது பிரச்சனை மட்டுமே. வெயில், மழை, காற்று எல்லாமே கூட அவர்களுக்கு எதிர் என்று எளிதில் சொல்லிவிடுவார்கள். சிறுசிறு சிக்கல்களைகூட பெரிதாக பார்த்து ஆபத்தில் தம்மை கொண்டுபோய்விட்டுக்கொள்வார்கள்.

தோல்விகள் தன்னை வீழ்த்தவந்த எமன் என்று நினைப்பதால் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள ஏதும் இல்லை என்று நினைப்பார்கள். தோல்விகளில் துவண்டுபோய் முன்னேறாமல் தமது வசதி வட்டத்தில் ஆசனம் போட்டு அமர்ந்துகொள்வார்கள்.

2. குறைந்த தன்னம்பிக்கை: செய்த பிறகே யோசிப்பார்கள். ஒருகணநேர உந்துதலில் காரியத்தில் இறங்கிவிட்டு பிறகுதான் அதைவிட சிறந்த வேறு சாய்ஸ் அல்லது வழிமுறை இருப்பதை கண்டு அறிவார்கள். மேலும் தம்மையே நொந்து கொள்வார்கள்.

வருங்காலம் பற்றி சிந்திக்காமல் நடந்ததையே நினைத்து நேரத்தை வீணடிப்பார்கள். தற்சமயம் நடப்பதை மறந்து எதுவுமே தற்செயலாக நடக்கும் என்று நினைப்பார்கள். தன்செயல் தான் வெற்றிபெற்றுத்தரும் என்பதையும் நடந்த ஒன்றை நினைத்து நின்றால் ஏற்படும் இழப்புகளையும் உணரமறுக்கிறார்கள்.

3. அர்த்தமற்ற பேச்சு: கேட்பதுகுறைவு; பேசுவதுஅதிகம். தானே பேசவேண்டும். பிறர் அதைகேட்கவேண்டும் என்பதில் தொடங்கி பொய்யைக்கூட உண்மைபோல பேச விரும்புகிறார்கள். தாம்பேசுவது அபத்தம் என்று சற்றும் நினைக்காமல் தமது சுயபிரதாபங்களை எடுத்துவைத்து பெயர் வாங்கும் இடைவெளியில் பிறர் சொல்லும் நல்ல யோசனைகளை கோட்டை விடுவார்கள்.

காதுகளை மூடிக்கொண்டு வாயை மட்டும் திறந்துவைத்தால் வாய்ப்புகள் வருமே தவிர வெற்றி வராது. பிறர் சொன்னதைக்கேட்டல் தமக்கு தரக்குறைவு என்று நினைக்கும் எண்ணம் இருப்பதுவும் காரணம்.

4. முயலாமை: சுலபமாக முடியாது என்று ஒப்புக்கொள்வார்கள். வெற்றியாளர்கள் தோல்வியில் இருந்து பாடங்கள் கற்பர். தோல்வியாளர்கள் தோல்வி வந்ததுமே துவண்டுபோய் தன்னால் இயலாது என்ற முடிவுக்கு வருவார்கள்.

தவறு நிகழும்போது மேலும் செய்ய விருப்பம் இல்லாது போய்பாதியில் விட்டு விட்டு அடுத்த விஷயத்தை பாதியில் எடுத்துவிட்டு அரைகுறை நிபுணர்களாக வலம் வருவார்கள். ஆனால் கதை என்னவோ அதேதான் இருக்கும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று. எடுத்தேன் முடித்தேன் என்று அல்ல. கனவுகளை நனவாக்கும் பழக்கம் இவர்களிடம் சிறிதும் இருக்காது.

5. பொறாமை: அடுத்தவரையும் தமது நிலைக்கு சுலபமாக கொண்டுவரும் சாமர்த்தியம் நிறைய உண்டு. வெற்றியாளர்களைக் கண்டு பொறாமை கொள்வாரே தவிர அவர்களிடமிருந்து என்ன கற்கலாம் என்று ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். வெற்றிபெறுபவர் பற்றி புரளி கிளப்பிவிடுவது, அவதூறு பேசுவது, வதந்திபரப்புவது, அவர்களை எப்படியாவது கீழே இறக்குவது என்பதில் தீர்மானமாக இருப்பது இவர்கள் பழக்கம். வெற்றியின் ரகசியம் கற்றுக்கொள்ள நேரம் இல்லை என்று விட்டு பிறரை கவிழ்க்க அதிகம் மெனக்கெடுவார்கள். எதிலும் தம்மால் ஜெயிக்கமுடியும் என்று சற்றும் நம்பாதவர்கள்.

6. சோம்பேறித்தனம்: நேரத்தை வீணடிப்பவர்கள். அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று கொஞ்சமும் தெரியாதவர்கள். உண்பது, உறங்குவது, உழைக்கும் நேரத்தை களிப்பில் இழப்பது, வெற்றுச்சுவரை உற்றுப்பார்ப்பது, கற்றுக்கொள்ள மறுப்பது, வேலை மற்றும் இன்பம் இரண்டையும் பாகுபாடின்றி நேரம் வகுத்து பொழுதைக் கழிப்பவர்கள் இவர்கள். எதற்கும் நேரம் இல்லை என்னும் இவர்களுக்கு நேரம் சரியில்லை என்று பிறகுதான் புரியும்.

7. குறைகூறுதல்: குறுக்குவழிதான் எனதுவழி என்பார்கள். அதிகம் வருவாய், அங்கீகாரம் இல்லாத ஒரு பாதையினை தேர்வு செய்துவிட்டு வெற்றிபெற்றவர்களை ஏளனம் செய்வார்கள். கஷ்டம், வலி, தியாகம் இல்லாது சிறந்தவை மட்டும் வேண்டும் என்றால் எப்படிக் கிடைக்கும் என்று நினைத்துப்பார்க்காத வேடிக்கை மனிதர்கள் இவர்கள். போட்டதுதானே முளைக்கும், செய்ததுதானே கிடைக்கும் என்று இவர்கள் புரிந்துகொள்ள மறுப்பவர்கள். முயற்சியும், வெற்றிக்கு தேவையான சரியான நடவடிக்கையும் எப்போதும் நல்ல பலன்தரும் என்பதை உணரமறுப்பதால் அவஸ்தைக்கு உள்ளாகும் மனிதர்கள் இவர்கள்.

நீங்கள் எப்படி?

எடுத்த காரியம்யாவிலும் வெற்றிபெறும் வல்லவர்கள் பலவழிமுறைகளை தெரிந்துவைத்திருக்கிறார்கள், பல மனிதர்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள், சிறந்த நபர்களை உதாரண மனிதர்களாக தேர்வு செய்கிறார்கள், சரியாக திட்டமிடுகிறார்கள், வலிவேதனை உணராது உழைக்கிறார்கள், தியாகம் செய்ய துணிகிறார்கள், தோல்வி கொண்டு துவளாது முன்னேறுகிறார்கள், சாதிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள், பிறரது அபிப்ராயங்கள் கேட்டு பாதை மாறாமல் இருக்கிறார்கள். அதனால் வெற்றி இவர்களை தேடிவருகிறது. எனவே பழக்கம் நல்லதாக இருந்தால் வெற்றி பெறுவது ஒரு பழக்கமாக நல்ல வழக்கமாக மாறி விடுகிறது. நீங்கள் எப்படி ?

பழக்கம் தீயது என்றால் மாற்றுங்கள். வெற்றிக்கொடி நாளும் ஏற்றுங்கள்.

0 கருத்துரைகள்: