Share

Monday, February 23, 2015

சணல் கைவினைப் பொருட்கள் தயாரிக்க இலவச பயிற்சி: திருப்பூரில் 45 நாட்கள் நடக்கிறது.

சணல் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் குறித்த இலவச தொழில்முனைவோர் பயிற்சி வகுப்பு திருப்பூர் நிஃப்ட்டீ கல்லூரியில் 45 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து, திருப்பூர் நிஃப்ட்டீ கல்லூரி தலைவர் சி.எம்.என்.முருகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமீபகாலமாக புதிய வகையில் கைவினைப் பொருட்கள், ஆடை ரகங்களை உருவாக்கி மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய மலிவான விலையில் பொருட்கள் தயாரிப்பது பிரபலமாகி வருகிறது. சணல் போன்று உறுதியான, மலிவான இழைகளைக் கொண்டு புதிய வகையில் கைவினைப் பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தி லாபம் ஈட்டுவதும் பெருகி வருகிறது.

பருத்தி இழைகளுக்கு அடுத்ததாக சணல் இழை மட்டுமே அதிகளவில் இயற்கையாகக் கிடைக்கக்கூடியதாகும். தாவர வகை இழைகளில் மிகவும் மலிவானதாகவும் இந்த சணல் இழைகள் விளங்குகின்றன. நூறு சதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், காண்பவரை கவரும் வகையில் கைவினைப் பொருட்களை உருவாக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. மேலும், சணல் சார்ந்த பசுமைப் பொருட்களை தயாரித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதற்கு சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு தேசிய சணல் வாரியம் உறுதுணையாகவும் இருந்து வருகிறது.

இந்த முயற்சியை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருப்பூர் நிஃப்ட்டீ கல்லூரியுடன் இணைந்து சணல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சியை வியாழக்கிழமை (பிப்.26) முதல் 45 நாட்களுக்கு நடத்த உள்ளது. இந்தப் பயிற்சியின்போது எம்ப்ராய்டரி, சணல் தோரணம், செல்போன் கவர், ஹேர் கிளிப்பிங், பென்சில் ஹோல்டர், போட்டோ பிரேம் உள்பட பலவித பொருட்கள் தயாரிப்பது குறித்து கற்றுத் தரப்பட உள்ளது.

இப்பயிற்சியில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரையுள்ள 10-ம் வகுப்பு படித்த பெண்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 80563 23111, 97917 69111 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

0 கருத்துரைகள்: