படிப்பறிவு பெற்றவர்களால் மட்டுமே ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே, நமது எதிர்காலம் வளமாக இருக்க இளைஞர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்பிப்பது அவசியம் என, வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.
சென்னை புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை நடைபெற்ற நூலக உலகம் மாத இதழ், உத்தம நாயகன் நூல்கள் வெளியீட்டு விழாவில் தலைமை வகித்து அவர் ஆற்றிய உரை:
படிப்பு என்றாலே பேரறிஞர் அண்ணாதான் நினைவுக்கு வருவார். மருத்துவமனையில் இருந்தபோதும் அவர் புத்தகம் படிக்க அறுவைச் சிகிச்சையைக் கூட தள்ளிவைக்கக் கோரியவர்.
தற்போது படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. இதற்கு யார் காரணம் எனத் தெரியவில்லை. மக்களவை உறுப்பினராக இருந்தபோது அங்குள்ள நூலகத்துக்குச் செல்வேன். அப்போது குறைந்த உறுப்பினர்களே படிக்க வருவார்கள்.
மக்கள் பிரதிநிதிகளே படிப்பு ஆர்வமம் இல்லாமல் இருப்பது நம் நாட்டில்தான். ஆகவே படிக்கும் பழக்கத்தை மக்களிடம் பத்திரிகைகள் ஏற்படுத்த வேண்டும்.
பத்திரிகைகள் படித்தாலே பொதுவான விஷயங்கள் தெரியும். ஆனால் முக்கியப் பொறுப்புகளில் இருப்போர் கூட பத்திரிகைகளைப் படிக்காதது வருத்தமளிக்கிறது. ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது பத்திரிகைகளின் கடமையாகும். ஊழல் தடுப்புக்கான சட்டம் அண்டை மாநிலங்களில் செயல்படுத்தப்படுவது குறித்து மக்களிடையே பத்திரிகைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆனால், ஜனநாயகத் தேர்தலில் கூட மக்களையே ஊழலுக்கு உள்ளாக்கும் போக்கே உள்ளது.
நமது நாடு நல்ல நாடு. நமது இளைஞர்களே நாட்டின் வருங்கால வளமாவர். அவர்களுக்கு நல்ல கல்வி, ஒழுக்கத்தை கற்றுத் தந்தால் நாடு மேம்படும் என்றார்.
நிகழ்ச்சியில் இதழ்களை வெளியிட்டு மாநில முன்னாள் அரசுச் செயலர் ஏ.எம்.சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் ரா.முத்துகுமாரசாமி, பிரிட்டிஷ் கவுன்சில் நூலக முன்னாள் தலைமை இயக்குநர் பி.ஜெயராஜன், கொல்கத்தா தேசிய நூலக முதன்மை இயக்குநர் பி.ஒய்.ராஜேந்திரகுமார், பி.சேடார்க், சாகித்ய அகாதெமி பொறுப்பு அலுவலர் அ.சு.இளங்கோவன், நூலக உலகம் ஆசிரியர் ஆவுடையப்பன், பின்னலூர் மு.விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment