Share

Friday, December 5, 2014

சமஸ்கிருதம்: சாட்டை சுழற்றிய சுப்ரீம் கோர்ட்; சரண்டரான மத்திய அரசு

டெல்லி: கேந்திரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் சமஸ்கிருத தேர்வு எழுதத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 6முதல் 8 வரையிலான இடைநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல்மொழியாக ஆங்கிலமும், இரண்டாவதாக பிராந்திய மொழியும், மூன்றாவதாக சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு இந்திய மொழியும் கற்றுத்தரப்பட்டு வந்தன. வெளிநாட்டு வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியை கற்பிக்க முந்தைய மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து 2011-12 ஆம் கல்வியாண்டிலிருந்து மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்திற்குப் பதிலாக வெளிநாட்டு மொழி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையில், கடந்த 27.10.2014 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் நடைபெற்ற கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆளுனர்கள் வாரியத்தின் 99-வது கூட்டத்தில் ஜெர்மன் உள்ளிட்ட அன்னிய மொழிப் பாடங்களை ரத்து செய்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக முன்பிருந்தவாறு சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியை கற்றுத்தர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சமஸ்கிருதப் பாடத்தை அறிமுகம் செய்யவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இம்முடிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஸ்மிரிதி இராணி ஆணையிட்டார். இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நடப்புக் கல்வி ஆண்டில், கேந்திரிய வித்யாலா பள்ளிகளில் ஜெர்மன் மொழி கற்பித்தலை தொடர்வதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சமஸ்கிருதத்தை அதிரடியாக பாடத்திட்டத்தில் சேர்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசின் தவறுகளுக்கு மாணவர்கள் தண்டிக்கப்படக்கூடாது. கேந்திரிய வித்யாலா பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்துவதை அடுத்த கல்வி ஆண்டுக்கு ஒத்திவைப்பதில் தனது நிலைப்பாட்டை 4 வாரங்களுக்குள் தெரிவிக்கவேண்டும்" என்றது. இந்நிலையில், மத்திய அரசு தனது பதில் மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. அதில், "நடப்பு கல்வி ஆண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சமஸ்கிருத தேர்வு எழுதத் தேவையில்லை" என தெரிவித்தது. மத்திய அரசின் முடிவை ஒரு தந்தையாக தான் வரவேற்பதாக நீதிபது அனில் ஆர். தேவ் கூறினார். மத்திய அரசு முடிவு காரணமாக மாணவர்களுக்கு சுமை ஏற்படாது என்றும் கூறினார். இருப்பினும், மத்திய அரசின் தற்போதைய முடிவு குறித்து பரிசீலிக்க கால அவகாசம் தேவைப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tks
-oneindia.com

0 கருத்துரைகள்: