சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், இன்போசிஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் தேர்வு பெருங்களத்தூர் ஜி.கே.எம்.பொறியியல் கல்லூரியில் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறுகிறது.
சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 168 பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் கணினி அறிவியல் மற்றும் மின்னணுவியல்,தகவல் தொழில்நுட்பம், மின்னியல் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட 6 துறைகளைச் சேர்ந்த தகுதியான இறுதியாண்டு மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு 2 நாட்கள் நடைபெறுகின்றன.
அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் ராஜாராம் வழிகாட்டுதலுடன் அண்ணா பல்கலைக்கழகம் தொழில்நிறுவனங்கள் கூட்டு நடவடிக்கை மையம் இயக்குநர் தியாகராஜன் மேற்பார்வையில் நடைபெறுகிறது.
2 நாட்கள் நடைபெறும் நேர்முக வேலைவாய்ப்புத் தேர்வில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஜி.கே.எம்.கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் சுஜாதா பாலசுப்ரமணியன் பேசும்போது,பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து மாணவர்களை ஜி.கே.எம்.பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வழிகாட்டும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதம் எதுவும் நிகழாவண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு, தீயணைப்புத்துறையினர் மற்றும் அவசர சிகிச்சைக்கு உதவும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment