Share

Saturday, December 27, 2014

உதயமானது ‘புதுச்சேரி மாநில உயர்கல்வி கவுன்சில்’


புதுச்சேரி மாநில உயர்கல்வி கவுன்சில்’ துவக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மேம்பாட்டிற்காக மத்திய அரசால்அளிக்கப்படும் நிதியுதவியை இனி புதுச்சேரிக்கு கிடைக்கும்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ’ராஷ்ட்ரிய உச்சடார் சிக்சா அபியான்’(ருசா) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கான நிதியுதவியை, மத்திய அரசு வழங்குகிறது.
மத்திய நிதியுதவி 
அதாவது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள, அரசின் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு புதிய கட்டடம் கட்டுவது, பரிசோதனைக் கூடம் அமைப்பது, கம்ப்யூட்டர்கள் வாங்குவது போன்றவற்றுக்கு, மத்திய அரசு 65 சதவீத நிதியை வழங்கும்.
மீதியுள்ள, 35 சதவீத நிதியை, மாநில அரசு தனது பங்களிப்பாக அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற, முதல்கட்டமாக, உயர்கல்வி கவுன்சில் அமைக்கப்பட வேண்டும்.
உறுப்பினர்கள் யார் 
இதன்படி, உயர்கல்வி கவுன்சில் புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்காக, தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டு, முதல் கவுன்சிலுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் 14 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
உயர்கல்வி கவுன்சிலின் தலைவராக உயர்கல்வித் துறை அமைச்சரும், துணைத் தலைவராக உயர்கல்வித் துறை செயலரும் இருப்பார்கள். உயர்கல்வித் துறையின் இயக்குனர், உறுப்பினர்-மாநில திட்ட இயக்குனராக இருப்பார்.
தாகூர் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜன், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயிரியல் பேராசிரியர் ராமானுஜம், போப் ஜான் பால் கல்லூரி முதல்வர் பால், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் குணசேகரன்,
இண்டெக்ரா நிறுவன மேலாண் இயக்குனர் ஸ்ரீராம் சுப்ரமண்யா, காரைக்கால் அண்ணா கல்லூரி, மாகி, மகாத்மா காந்தி, ஏனாம், எஸ்.ஆர்.கே., கல்லூரி, புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லூரி,  காரைக்கால் பாலிடெக்னிக் முதல்வர்கள், மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துசெழியன், காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் மத்திய அரசு, ஒரு பிரதிநிதியை நியமிக்கும். கவுன்சிலின் உறுப்பினர் செயலராக, தாகூர் கலைக் கல்லூரி இணை பேராசிரியர் மோகன்தாஸ் செயல்படுவார்.
முதல் கூட்டம்
புதுச்சேரி மாநில உயர்கல்வி கவுன்சிலுக்கு லாஸ்பேட்டையில் அமைந்துள்ள, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக வளாகத்தில், அலுவலகம் திறக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கவுன்சிலின் முதல் கூட்டம், கவுன்சிலின் தலைவரான, முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஜனவரி முதல் வாரத்தில் நடக்கிறது.
அப்போது, புதுச்சேரி அரசு கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து கவுன்சில் அனுமதி தரும். கவுன்சில் அனுமதி அளித்தவுடன், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நிதியுதவி பெறுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும்.
பட்டியல் ரெடி! 
புதுச்சேரியில், அரசு பொறியியல் கல்லூரிகள்-2, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்-12, பாலிடெக்னிக் கல்லூரிகள்-6 அமைந்துள்ளன. இந்த கல்லூரிகளுக்கு, என்னன்ன உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்பது குறித்த பட்டியலை, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தயார் செய்துள்ளது. இந்த விபரங்கள், முதல் கவுன்சில் கூட்டத்தில் வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட உள்ளது.

0 கருத்துரைகள்: