Share

Thursday, December 11, 2014

‘சாதாரணமானதல்ல கல்வி’

நமது செயலை வடிவமைக்கும் குணநலன், குறிக்கோள், பண்பாடு மற்றும் அறிவு ஆகிய நான்கு முக்கிய அம்சங்களை முறையாக கட்டமைக்க உதவுவது தானே ‘கல்வி’!
கல்வியின் முக்கியத்துவம்
மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பிரதான காரணியாக விளங்கும் ‘கல்வி’, தனிமனித, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு அனைத்து விதத்திலும் அச்சாணியாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இந்நிலையில், கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது அத்தியாவசியமான ஒன்று. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், புதிய வாய்ப்புகளுக்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சமூக வளர்ச்சிக்கும், நகர மேம்பாட்டிற்கும், சுகாதாரம், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நிர்வாகம் என அனைத்திற்கும் கல்வி என்ற ஒன்று நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை.
சர்வதேச அளவில் ஒரு நாட்டின் உறுதித்தன்மையை அளவிடுவதற்கும் கல்வி ஒன்றே உண்மையான அளவுகோல். இந்தியாவில் நிலவும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு கல்வி ஒன்றே தீர்வு.
மாணவர் பலம்
அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கு இணையானது நமது நாட்டின் மாணவர் எண்ணிக்கை. 31.5 கோடி மாணவர்களை கொண்ட நம்மால் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இந்த எண்கள், நம் நாட்டில் கல்விக்கான வாய்ப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதை மட்டும் உணர்த்தவில்லை; குறிப்பிடத்தக்க வகையில், கல்வி முறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் உணர்த்துகிறது.
மிகப்பெரும் சவால்கள் நிறைந்த நாட்டில் நாம் வாழ்கிறோம். சிறந்த கல்வியை பெறுவதும், பயன்படும் வகையில் அவற்றை நாம் அளிப்பதும் அவ்வளவு எளிதான செயலில்லை. ஏறத்தாழ 28.3 கோடி பேர், 19 வயதிற்குள் இருக்கும் மாணவர்கள் என 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிவுறுத்துகிறது. அதில், பிளே ஸ்கூல்களில் விளையாடும், 4 வயதிற்கும் குறைவான குழந்தைள் 1.05 கோடி.
பணிபுரியும் மாணவர்கள், 95 லட்சம். 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள், 15 லட்சம் பேர். இந்த பல்வேறு பிரிவினரின் பலவிதமான தேவைகள், அவர்களுக்கான சரியான திட்டங்களை தீட்ட மற்றும் அவற்றை முறையாக செயல்படுத்துவதன் அவசியத்தை உணர்த்துகிறது.
ஆய்வுகளின் அலட்சியம்
சமூகத்தின் அடிப்படை அங்கமான கல்வி, இயல்பாகவே தரமான கல்வி நிறுவனங்களால் உருவாக்கப்படும் தரமான மாணவர்களால் தானே தீர்மானிக்கப்படுகிறது? துரதிஷ்டவசமாக, எந்த ஆய்வும் முன் தேர்வு, பயிற்சி வகுப்புகள் போன்ற பல்வேறு கல்வி சேவைகளின் வேறுபாடுகளை, சர்வதேச அலகுகளின் அடிப்படையில் மதிப்பிடவில்லை; அனைத்து கல்வி நிறுவனங்களும் அதில் இணைக்கப்படவுமில்லை.
செல்வம் கொழிக்கும் மேலாண்மை, பொறியியல் போன்ற துறைகளை மட்டும்... அதுவும் வழக்கமான அடிப்படை அலகுகளால் மதிப்பிடப்பட்ட ஆய்வுகளே அதிகளவில் உள்ளன. இவையும் முக்கியம் என்ற போதிலும், கல்வி நிறுவனங்களின் அனைத்து அம்சங்களையும் அறிந்துகொள்வது, தங்களின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில், சர்வதேச முறையில் அனைத்து கல்வி தகவல்களையும் சரியான வடிவில் அளித்தால், தங்களுக்குரிய படிப்பை அவர்களால் எளிதாக தேர்ந்தெடுக்க முடியும்.
வேண்டும் விழிப்புணர்வு
கல்வி நிறுவனங்களின் தோற்றத்தை மட்டுமே சார்ந்ததல்ல, சிறந்த கல்வி. மாணவர்கள் தங்களுக்கான சிறந்த கல்வி நிறுவனத்தை தேர்வு செய்ய, எவ்வகையில் ஒரு கல்வி நிறுவனம் ஆற்றல் மிகுந்த கல்வியை வழங்குகிறது? நற்பண்புகளை வளர்க்கும் இடமாக திகழ்கிறது? கல்லூரியின் பரப்பளவு மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் கடந்து, கண்களுக்கு புலப்படாத பல முக்கிய தகவல்கள், அக்கல்லூரியின் தரத்தை அறிய உதவும்.
மிகப்பெரிய எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள், எந்தவித குறிப்பிட்ட அம்சங்களையும் யோசிக்காமல், பாடப்பிரிவின் முக்கியத்துவத்தையும் உணராமல், கண்மூடித்தனமாக, கல்வி நிறுவனத்தை தேர்வு செய்கின்றனர் என்பதை வேதனையுடன் நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
பெரும்பாலான மாணவர்கள் தங்களது நண்பர்கள், உறவினர்களின் வாய்வழி வார்த்தைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து தங்களுங்கான கல்லூரியை தேர்வு செய்கின்றனர். ஒரே காலனியில் அல்லது பகுதியில் வசிக்கும் மாணவர்கள் கூட்டமாக ஒரே கல்வி நிறுவனத்தில் சேர்வதை பார்க்க முடிகிறது. இவ்வாறாக, கல்வி நிறுவனங்களின் தரத்தை ஒப்பிட்டுப் பார்க்காமல், குறிக்கோளின்றி தேர்வு செய்யும் போக்கு சரியானதா?
வழிமுறைகள்
* பாடத்திட்டத்தை உருவாக்குவதில் தொழில்நிறுவனங்களின் பங்களிப்பு
* கல்வி கற்கும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான அங்கீகாரம்
* நவீன தொழில்நுட்பம், ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி உட்பட கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான அனைத்து விதமான அம்சங்கள்
* 15 வயது மேற்பட்டவர்களுக்கு தொழில்சார் பயிற்சி; குறைந்தபட்சம் இரண்டு தொழில்சார் பயிற்சியை பாடத்திட்டத்துடன் இணைத்தல்
* 16 வயது வரை அனைத்து பெண் குழந்தைகளும் கல்வி கற்பதை ஊக்குவித்தல்
* அனுபவசாலிகளின் அறிவையும், திறனையும் மேம்படுத்தும் வகையில், அவ்வப்போது உரிய பயிற்சி அளித்தல்
* அனைத்து கல்வி நிறுவனங்களின் புலப்படக்கூடிய மற்றும் புலப்படாத அம்சங்களை குறிப்பட்ட கால இடைவெளியில் மறுஆய்வு செய்தல், அதன்மூலம் அவற்றை தொடர்ந்து மேம்படுத்துதல்
ஆகிய வழிமுறைகள் மிகச்சிறந்த கல்வியை வழங்கவும், சீர்மிகு சமுதாயத்தை உருவாக்கவும் உதவும்.

-சந்திரமௌலி, சி.இ.ஒ., டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி.

0 கருத்துரைகள்: