Share

Saturday, December 20, 2014

அதிகமான கல்வித் தகுதியும் வேலைவாய்ப்பும்

கனிகா மனதில் பதற்றத்துடன் நேர்முகத் தேர்வு அறையில் உட்கார்ந்திருக்கிறாள். எதிரில் உள்ள தேர்வாளர்கள் அவளது தன்விவரக் குறிப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்வாளர் 1 – நீங்க நிறையப் படிப்பீங்களோ?
கனிகா - நிறைய சார். இலக்கியப் புத்தகங்களையும் படிப்பேன். நேத்துதான் கிரேக்கக் காவியமான இலியட் ​நூலின் மொழிபெயர்ப்பைப் படிச்சு முடிச்சேன்.
தேர்வாளர் 2 - ஐ.ஸீ. ரொம்ப சீரியசான புத்தகங்கள்தான் பிடிக்குமோ?
கனிகா – அப்படின்னு இல்லை. சிட்னி ஷெல்டனின் புத்தகங்களும் பிடிக்கும் சார்.
தேர்வாளர் 2 – அப்படின்னா சிட்னி ஷெல்டனின் புத்தகங்கள் சீரியசானவை இல்லையா?
கனிகா – அவற்றையும் நிறைய ஆராய்ச்சி செய்த பிறகுதான் எழுதுறார்னு புரியுது. ஆனாலும் ஒரு புதினம் என்கிற மதிப்பீட்டில் அதைச் சீரியசானதுன்னு சொல்ல முடியாது இல்லையா?
தேர்வாளர் 1 – (புன்னகையுடன்) இலியட், ஒடிஸி இதோடெல்லாம் ஒப்பிட்டா சிட்னி ஷெல்டன் நாவல்கள் சீரியசில்லைதான்.
தேர்வாளர் 2 – ஷெல்டனின் எந்தப் புத்தகம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?
கனிகா - இஃப் டுமாரோ கம்ஸ்.
தேர்வாளர் 2 – எதனால்? அந்த ​நூலின் முக்கியக் கதாபாத்திரம் ஒரு பெண்ணாக இருப்பதாலா?
கனிகா – அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மிகவும் புத்திசாலித்தனமான, சவால்களைக் கச்சிதமாகச் சந்திக்கக்கூடிய ஒரு பெண்ணாக அவள் இருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
தேர்வாளர் 1 – நீங்களும் அப்படித்தானா?
கனிகா - புத்திசாலின்னுதான் நினைக்கிறேன். ஆனால் ட்ரேஸி மாதிரிச் சதிவேலையிலெல்லாம் ஈடுபட மாட்டேன். என்னை நம்பலாம். (சிரிக்கிறாள். தேர்வாளர்களும் சிரிக்கிறார்கள்.)
தேர்வாளர் 2 – நீங்கள் புத்திசாலின்றதை நம்பறேன். நிறையப் படிச்சிருக்கீங்க. (கனிகா கொஞ்சம் குழப்பமாகப் பார்ப்பதைக் கவனித்து) நீங்க படிச்ச புத்தகங்களைச் சொல்லலே. உங்களுடைய கல்வித் தகுதியைச் சொன்னேன்.
கனிகா - ரொம்ப தாங்ஸ் சார்.
தேர்வாளர் 1 – (மற்றொரு தேர்வாளரைக் கொஞ்சம் விஷமமாகப் பார்த்தபடி) ஏன் சார், மிஸ் கனிகாவுக்குத்​ தேவைக்கு அதிகமாகவே க்வாலிஃபிகேஷன் இருக்கே, என்ன செய்யலாம்?
தேர்வாளர் 2 – அதுதான் நானும் யோசிச்சுக்கிட்டிருக்கேன்.
கனிகா- (சற்றே பதற்றத்துடன்) அதிகமா க்வாலிஃபை ஆனால் நல்லதுதானே சார்?
தேர்வாளர் 1 – அப்படிச் சொல்ல முடியாது. குறைவான கல்வித் தகுதி மாதிரியே மிக அதிகமான கல்வித் தகுதியும் சில சமயம் சங்கடத்தை உண்டு பண்ணும்.
தேர்வாளர் 2 – சொல்லப்போனால் கொஞ்சம் கம்மியாக இருந்தால்கூட உரிய பயிற்சி கொடுத்துச் சரி செய்து விடலாம்... அது இருக்கட்டும், நீங்களே சொல்லுங்க இந்த வேலைக்கு நீங்கள் ஓவர்-க்வாலிஃபைடு இல்லையா?
கனிகா (தடுமாறுகிறாள். பின் மெல்ல) - அப்படிச் சொல்ல முடியாது சார். எனக்குக் கல்வித் தகுதி அதிகமாக இருப்பது உங்க நிறுவனத்துக்கும் நல்லதுதானே?
(தேர்வாளர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். பிறகு மேலும் சில கேள்விகளைக் கேட்கிறார்கள். பதற்றத்தில் இருக்கும் கனிகா அவற்றுக்கு அரைகுறையாகப் பதில் சொல்கிறாள்).
தேர்வாளர் 1 – நாங்க கேட்க வேண்டியதைக் கேட்டுட்டோம். நீங்க ஏதாவது எங்களைக் கேட்கணுமா?
கனிகா - எதுவுமில்லை சார். ஆனால் அதிகமாகப் படித்ததே என் வேலை வாய்ப்பை தடுத்திடக் கூடாது. அந்தக் கவலைதான் எனக்கு.
தேர்வாளர் – (சிரித்தபடி) பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட்.
(தேர்வாளர் கூறியதை எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது என்று புரியாமல் கனிகா குழப்பத்துடன் விடை பெறுகிறாள்)
எதிர்பாராத கோணங்களில் கேள்விகள் வரும்போது திகைப்படைவதும், பதில் சொல்லக் கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்வதும் இயற்கையானதுதான். ஆனால் அதுபோன்ற கணங்களில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சிந்தனையில் வேகம் கூட்டிக் கொள்வது அவசியம்.
“தேவைக்கதிகமான கல்வித் தகுதி கொண்டவரை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?’’ என்ற கேள்வி கனிகாவிடம் மறைமுகமாக எழுப்பப்படுகிறது. இதற்குப் பலவிதங்களில் பதில் கூற முடியும்.
“கல்வித் தகுதி ஒருபுறம் இருந்தாலும் நடைமுறை அனுபவம் என்பது மேலும் முக்கியம்’’ என்று கூறித் தன்னடக்கத்தை வெளிப்படுத்திக் கொள்ளலாம். இதன் ​மூலம் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கர்வமின்றிப் பணிபுரிவேன் என்பதையும் அவள் வெளிப்படுத்தியதாக அர்த்தம்.
வேறொரு விதத்தில் கனிகா சாமர்த்தியமாக விடை அளித்திருக்கலாம். “நான் சீக்கிரம் எதையும் நன்றாகக் கற்றுக் கொள்ளக் கூடியவள் என்பதற்கான முதல் ஆதாரம் இந்தக் கல்வித் தகுதிகள். வேலையையும் சீக்கிரம் கற்றுக் கொள்வேன் என்பதற்கான அடிப்படையாக இதை​ வைத்துக்​ கொள்ளலாமே’’ என்றும் கூறியிருக்கலாம்.
தவிர ஒரு கேள்விக்குச் சரியாக விடையளிக்கவில்லை என்று தோன்றினால், படபடப்பைக் கூட்டிக் கொண்டு அடுத்தடுத்த கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தடுமாறக் கூடாது. யாராக இருந்தாலும் சில கேள்விகளுக்குத் தவறான பதில்களையோ, முழுமையற்ற பதில்களையோ அளிக்கத்தான் செய்வார்கள். எனவே அடுத்தடுத்த கேள்விகளில் கவனம் செலு​த்த வேண்டுமே தவிர, ஏற்கனவே அளித்த பதில்களையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.
தவிர “நீங்கள் வேறு ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமா?’’ என்று தேர்வாளர்கள் கேட்டபோது கனிகாவின் பதில் மேலும் சிறப்பாக இருந்திருக்கலாம். “இவ்வளவு அருமையான வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி சார். நான் ஏதாவது விஷயத்தில் மேலும் கவனம் செலுத்த வேண்டுமென்று நினைத்தால் அதை நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். அடுத்த கட்டத்தில் சந்திப்போமென்று நம்புகிறேன்’’ என்பதைப் புன்னகையுடன் கூறியிருக்கலாம். ஒவ்வொரு சின்ன விஷயமும் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

0 கருத்துரைகள்: