Share

Thursday, July 23, 2015

பெற்றோர்களுக்கு அப்துல் கலாம் வேண்டுகோள்

பெற்றோர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்துவிட்டு, குழந்தைகளுடன் சேர்ந்து புத்தகங்களை படிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தினார்.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்கத்தின் 90-ஆம் ஆண்டு விழாவில் டிஜிட்டல் ஆல் அமைப்பைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

அரியலூர் பகுதி விவசாயிகள் இயற்கை வேளாண்மை முறையில் பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். அந்தப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு கிராமங்களில் விற்பனை அங்காடிகள் வேண்டும். இயற்கை விவசாய உணவுகளால் உடல்நலம் காக்கப்படும்.

ஒவ்வொரு வீட்டிலும் சிறிய நூலகம் வேண்டும். பெற்றோர் தமது குழந்தைகளுடன் நூல்களைப் படித்து கலந்துரையாட வேண்டும். தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குழந்தைகளுடன் செலவழிக்க பெற்றோர் முன்வர வேண்டும்.

மதுரை மல்லிகைக்கு சர்வதேச அங்கீகாரம் பெற நடவடிக்கை தேவை. இங்குள்ள உற்பத்திப் பொருள்களை தேசிய அளவில் தெரியப்படுத்த கண்காட்சி நடத்த வேண்டும்.

வேலைவாய்ப்பு பெருகவும், வறுமை ஒழியவும் தொழில் வளர்ச்சி அவசியம். கிராம- நகர இடைவெளியைக் குறைக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், நீர் மேலாண்மை, நேர மேலாண்மை, திடக்கழிவு சுழற்சி முறை, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஊராட்சி அமைப்புகளுடன் வர்த்தக சங்கத்தினர் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

பின்னர் கூட்டத்தினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உற்பத்தி, வடிவமைப்பு, தரம் ஆகியவை மேம்படும். தொலைதொடர்பு, அடிப்படை வசதிகள், சூரிய மின்சாரத்துடன் கூடிய இல்லம் ஆகியவை கிராம மக்களை மேம்படுத்தும் என்றார்.

0 கருத்துரைகள்: