Share

Saturday, January 3, 2015

வேலை(job) என்பது மகிழ்வா(joy) ?

வேலை(job) என்பது மகிழ்வா(joy) என்பதுதான் இன்றைய கேள்வி.

நாம் ஏன் சாப்பிட வேண்டும் எனும்போது, பசியாற்ற, உயிர்வாழ, பிடிச்சிருக்கு என்று பல்வேறு பதில்கள் கிடைக்கும். அதுபோல, நாம் ஏன் வேலை பார்க்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கும்போது, பொறுப்பு காரணமாக, கடமை மற்றும் கடன் காரணமாக, குடும்பத்தினை நிர்வகிக்க பணம் வேண்டுமே? அதனால் என்ன செய்வது, தலையெழுத்து(மனப்பாங்கு) என்று பலர் பலவிதமாக பதில் தருகிறார்கள்.

ஒரு வேலையை - என்ன செய்ய வேண்டும்? என்ற வினாவிற்கு பதில் தெரிந்தால், அவர் சூப்பர்வைசர் ஆக இருப்பார். எப்படி செய்ய வேண்டும்? என தெரிந்தால் அவர்தான் ஆபரேட்டர். ஏன் செய்ய வேண்டும்? எனத் தெரிந்தால் அவர் நிறுவன அதிபர்.

உணர்வுக்கு சக்தி அதிகம்

உணர்வு(feeling) என்பது வெறும் சிந்தனையை(thinking) விட மிகவும் சக்தி வாய்ந்தது. ஆக, வேலை எனும்போது என்ன நினைக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற இரண்டையும் பொறுத்தது. குழப்பமா? உற்சாகமா? என்பதுதான் கேள்வி.

ஒரு வேலையை என்னால் செய்ய முடியும் என்பது வேறு. எனக்கு செய்யத் தெரியும் என்பது வேறு. தொடர் நடவடிக்கையே பழக்கமாக மாறுகிறது. செய்யும் பணி ஒரு பிரச்சனை(problem) என்றால், அது நம்மை மீறியது. அதுவே ஒரு சவால்(challenge) என்றால், அது நம்மால் சமாளிக்கக் கூடியது என்று பொருள். பெரிய மகத்தான விஷயங்கள் அனைத்துமே பாதிப்பில்லாத எளிய விஷயங்கள்தாம்.

வேலையில் பெருமிதம்

இங்கே ஓர் உண்மை சம்பவத்தை சொல்லியே ஆக வேண்டும். ராஜராஜ சோழன் பெரிய கோயிலைக் கட்ட ஏற்பாடு செய்திருந்த சமயம், மாறுவேடத்தில், வேலை எப்படி நடக்கிறது என்று பார்வையிட வருகிறார்.

நிறைய சிற்பிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மூன்று பேரை தேர்வுசெய்து, அவர்கள் அருகில் சென்று, முதலாவது நபரிடம் கேட்கிறார், ‘என்ன செய்கிறீர்கள்?‘ பார்த்தால் தெரியவில்லை...கல்லை உடைத்து சிலை செய்யும் வேலை செய்கிறேன்‘. அடுத்த நபரிடம் அதே கேள்வி. அவர் சொன்னார், ‘வேறு தொழில் தெரியாது. ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்‘.

மூன்றாவது நபரிடமும் அதே கேள்வி. வந்திருப்பது ராஜா என்பது தெரியாமல் மூவருமே பதில் சொன்னாலும், இவரது பதில் மிக அருமை. ‘உலகத்தில் சரித்திரம் படைக்கப் போகும் மிகப்பெரிய கோயிலாக விளங்கப்போகிற இங்கே, முக்கியமான ஒரு சிலையை வடித்துக் கொண்டிருக்கிறேன், பெருமிதத்தோடு வேலை செய்கிறேன்‘. பதில் கேட்ட ராஜா, தனது வேடத்தைக் கலைத்து, தான் யார் என்பதை வெளிக்காட்டி, அந்த சிற்பிக்கு பொன்னும் பொருளும் பரிசாக வழங்கி கவுரவித்தார்.

இப்போது புரிந்திருக்கும், நமது வேலையை நாம் எப்படி பார்க்கிறோம், பார்க்க வேண்டும் என்று...!

செய்யும் வேலையில் வெற்றியை பழக்கமாக மாற்றிக்கொள்ள எளிய வழி தெரிந்துகொள்ள ஆசையா? காத்திருங்கள் அடுத்தவாரம் வரை... 

0 கருத்துரைகள்: