Share

Wednesday, January 28, 2015

குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்க அதிரடியில் இறங்கிய அரசு

சென்னை: குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என, அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தமிழகம் முழுவதும், தொழிலாளர் ஆய்வாளர்கள் வேட்டையைத் துவங்கி உள்ளனர்.

பொதுவாக, 14 வயது வரையிலான குழந்தைகளை வேலைக்கு அமர்த்த தடை உள்ளது. ஆனால், தடையை மீறியும் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில், 2001ல், 4.19 லட்சம் குழந்தை தொழிலாளர் இருந்தனர். அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், 29,656 பேராக குறைந்து விட்டது என தமிழக அரசு கூறி வருகிறது.

ஆனால், 2011ம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின் படி, தமிழகத்தில் 1.51 லட்சம் முழு நேர தொழிலாளர்; 1.32 லட்சம் பகுதி நேர தொழிலாளர் என, 2.83 லட்சம் குழந்தை தொழிலாளர் உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு, குழந்தை தொழிலாளர் தடுப்பு பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி, மாநிலம் முழுவதும், தொழிலாளர் ஆய்வாளர்கள் தீவிர வேட்டை நடத்த, தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

தொழிலாளர் நல ஆய்வாளர்கள், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நலத்துறை, குழந்தைகள் உதவி மையத்திற்கு வரும் புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்: