தமிழகத்தில் திருநெல்வேலி, ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் தலா 40 பி.வி.எஸ்சி. இடங்களில் மாணவர்களைச் சேர்க்க இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பு (பி.வி.எஸ்சி.), பி.டெக். (உணவு பதனிடும் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், இளநிலை மீன் வள மருத்துவப் படிப்பு (பி.எஃப்.எஸ்சி.) ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வு நடைபெற்றது.
தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 235-க்கும் மேற்பட்ட இடங்கள் கலந்தாய்வில் நிரப்பப்பட்டன.
அப்போது ஒரத்தநாடு, திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் பி.வி.எஸ்சி. படிப்புக்கு இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் வழங்காமல் இருந்தது.
ஒப்புதல் கிடைத்து விடும் என்பதால், அப்போதே மாணவர்களுக்கு ஒரத்தநாடு-திருநெல்வேலி ஆகிய இரண்டு கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 80 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இப்போது ஒப்புதல் கிடைத்து விட்டதால், ஒரத்தநாடு-திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதிக் கடிதம் பெற்றுள்ள மாணவர்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.பிரபாகரன் தெரிவித்தார்.
அக்டோபர் 3-ஆம் தேதி முதல் வகுப்பு: பி.வி.எஸ்சி. படிப்பு உள்பட அனைத்து இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 3-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன என்றும் துணைவேந்தர் ஆர்.பிரபாகரன் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment