Share

Thursday, December 4, 2014

மத உணர்வை தூண்டியதாக எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

 மதுரை கே.கே.நகரை சேர்ந்த அப்துல்கபூர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பாஜ தேசிய செயலர் எச்.ராஜா, ஜன. 4ம் தேதி சென்னையில் இந்து தர்ம பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பெரியார் மற்றும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் குறித்து தவறாக பேசியுள்ளார். இது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம். எச்.ராஜாவின் பேச்சு யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரது பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். யூ டியூப்பில் உள்ள அவரது பேச்சை நீக்கவேண்டும் என பிப். 4ம் தேதி டிஜிபியிடம் புகார் அளித்தேன். இதன்பின் தமிழக ஆளுனரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எச்.ராஜா மீது மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், எச்.ராஜாவின் பேச்சு குறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எச்.ராஜா மீது இ.பி.கோ மத, இன, மொழி மற்றும் ஜாதி குறித்த விரோத உணர்ச்சியை தூண்டிவிட முயற்சிக்கும் 153 (ஏ), அடிப்படை உணர்ச்சியை தவறான நோக்கத்தில் தூண்டிவிட்டு வளர்க்க முயற்சிக்கும் 505 (2) ஆகிய பிரிவுகளில் அக்டோபர் 1ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. -tamilmurasu

0 கருத்துரைகள்: