Share

Wednesday, December 24, 2014

புவி அறிவியல் படித்தால் அரசு பணியில் சேரலாம்

பூமி, கடல், வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய அனைத்து அம்சங்களை பற்றி படிக்கும் பிரிவு, புவி அறிவியல் அல்லது 'எர்த் சயின்ஸ்' என அழைக்கப்படுகிறது. பூமியிலிருந்தே அனைத்து வளங்களையும் பெறுகிறோம். எர்த் சயின்ஸ் துறை, எண்ணெய், இயற்கை எரிவாயு, எரிபொருள், நீர், மண் போன்ற வளங்களை ஆய்வு செய்வது, இயற்கைச் சூழல், சுற்றுச் சூழலை பாதுகாப்பது, இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம், மண்சரிவு போன்றவற்றிலிருந்து புவியைப் பாதுகாப்பது போன்ற அம்சங்களில் கவனத்தை செலுத்துகிறது.

* பணித்தன்மை:

எர்த் சயின்டிஸ்டுகளாகப் பணிபுரிவோர் மனித இனம், தகவல், புதிய சிந்தனை, தொழில் நுட்பம் போன்றவற்றை இணைத்து பணிபுரிகின்றனர். ஆய்வுக்கூடங்கள், அலுவலகங்கள், மாறுபட்ட பருவநிலைகள், நிலநடுக்கம், எரிமலை இருக்கும் பகுதிகளில் பணிபுரிவது போன்ற சவால் இவர்களுக்கு காத்திருக்கின்றன.

* துறைப்பிரிவுகள்:

எர்த்சயின்ஸ் துறையில் பல உட்பிரிவுகள் உள்ளன. புவியின் இயற்கைத் தோற்றங்களைப் படிப்பதற்காக பாறைகள், மண் போன்றவற்றைத் தோண்டி ஆய்வு செய்வது இதில் ஒன்று. வளிமண்டலம், ஹைட்ரோஸ்பியர், பூமி போன்றவற்றின் தன்மையை அறிவதற்காக, எர்த்சயின்டிஸ்டுகள் இயற்பியல், கணிதம், வேதியியல் தத்துவங்களை பயன்படுத்துகின்றனர். நிலத்தடி நீரிலுள்ள வேதிப்பொருட்கள், கனிமங்களின் அளவையும் ஆய்வு செய்கின்றனர்.

ஹைட்ரோஜியாலஜிஸ்டுகள் நிலத்தடி நீரையும், ஓசனோகிராபர்கள் கடல் தொடர்புடைய ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். பெட்ரோலியம் ஜியாலஜிஸ்டுகள், இயற்கை எண்ணெய், எரிவாயுவின் இருப்பிடம், உற்பத்தி குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

* கூடுதல்தகுதி:

கடுமையான தட்பவெப்பத்தில் பணிபுரிவது, பூமிக்கு அடியில் பணிபுரிவது போன்ற சவாலான பணிகள் நிறைந்த இத்துறையில் பணியாற்ற, நல்ல உடல்தகுதி பெற்றிருப்பது அவசியம். குழு மனப்பான்மை, நிர்வாகத்திறன் மற்றும் தலைமைப் பண்புகளைப் பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது. பி.எஸ்சி., எம்.எஸ்சி., டிப்ளமோ மற்றும் பி.எச்டி., ஆகிய பிரிவுகளில் இப்படிப்பு உள்ளது.

* வேலைவாய்ப்பு:

ஜியோசயின்டிஸ்டுகளுக்கு பிற இடங்களிலும் பணிவாய்ப்புகள் உள்ளன. இந்தியன் பீரோஆப்மைன்ஸ், மினரல் எக்ஸ்புளோரேஷன், இந்திய வானிலை மையம், ஓ.என்.ஜி.சி., ஜெம் இண்டஸ்ட்ரி, கட்டுமானத்துறை, கனிம ஆய்வு நிறுவனங்கள், சுற்றுச் சூழல்பாதுகாப்பு நிறுவனங்கள் என பல வாய்ப்புகள் உள்ளன.

* எங்குபடிக்கலாம்?
  • டெல்லி பல்கலைக்கழகம்
  • ஐ.எஸ்.எம்., பல்கலைக்கழகம், தன்பாத்
  • ஐ.ஐ.டி., காரக்பூர்
  • ஐ.ஐ.டி., ரூர்க்கி
  • புனே பல்கலைக்கழகம்
  • கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்.

0 கருத்துரைகள்: