Share

Thursday, December 25, 2014

விளம்பரவியல் - சான்றிதழ் படிப்புகள்

மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள அனைத்து துறைகளின் விற்பனை மற்றும் லாப இலக்குகளை தன்னகத்தே கொண்டு அவற்றின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் துறைகளில் முதன்மையானதாக விளம்பர துறை கருதப்படுகிறது. உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள விளம்பரத்துறை ஓவியம் வரைதல், வாசகங்களை வடிவமைத்தல், வர்ணம் தீட்டுதல், சுற்றுப்புற சூழலை உருவாக்குதல், கவர்ச்சியை ஏற்படுத்துதல், அறிமுகப்படுத்தப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என்ற விருப்பத்தை தோற்றுவித்தல் என பல்வேறு பணிகளை உள்ளடக்கியது. நகல் எழுத்தாளரைப் போன்று விளம்பரத்துறையும், தாங்கள் ஏற்றுக்கொண்ட உற்பத்தி பொருட்களின் அறிமுக வெளியீட்டை அந்த பொருளின் தன்மைக்கு ஏற்றபடி பிரதிபலிக்க வேண்டும் என்பதால் கடின உழைப்பும், ஆக்கப்பூர்வமான அறிவியல் சிந்தனையும், மக்களின் மனங்களை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் பெற்றிருத்தல் அவசியமான அடிப்படை தகுதிகளில் ஒன்றாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி முகாம்களில் சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வாசகங்களை உருவாக்கி தரவேண்டும் என்பதால் விளம்பரத்துறை தனிப்பட்ட நபர்களை சார்ந்திருக்காமல் அனைத்து கலைகளிலும் கைதேர்ந்த நிபுணர்களை குழுவாக செயல்பட்டு வருகிறது. புதிய உற்பத்தி பொருட்களை அறிமுகப்படுத்தும் சர்வதேச சந்தை மையங்களில் முதன்மைப்படுத்தப்படும் பொருட்களின் தரவரிசையை நிர்ணயிப்பதிலும் விளம்பரத்துறையின் பங்கு அபரிமிதமானதாக கருதப்படுகிறது. கண்காட்சிகளில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களில் பெரும்பாலானவற்றை பார்வையிடும் மக்கள் டிவி, ரேடியோ, பத்திரிகை, நாளிதழ்கள், போஸ்டர்கள் போன்றவற்றின் மூலம் தாங்கள் அறிந்து கொண்ட பொருட்களை வாங்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர் என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. விளம்பரத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு விசாலமான அறையும், தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் எதிர்பார்க்கும் விளம்பரத்தின் தரத்தை எளிதாக பெறமுடியும். குறிப்பிட்ட ஒரு பொருளுக்கான விளம்பர ஒப்பந்தத்தினை ஏற்பவர்கள் அதை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திருப்திகரமாக முடித்துக்கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாவதால் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டிய நிலை இத்துறையின் அடிப்படை விதிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இத்துறையின் அனைத்து பணிகளும் மக்களை சார்ந்தே அமைந்திருப்பது இதன் சிறப்புகளுள் ஒன்று. மக்களின் விருப்பத்தை தூண்டுதல் என்பது இத்துறையை பொறுத்தவரை சவாலானது என்பதால் இதில் பணியாற்றி தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆவல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளின் மத்தியில் பரவலாக உள்ளது.

0 கருத்துரைகள்: