மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஜனவரி மாதம் 08-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்படுகிறது.
மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர்களின் நியமனத்திற்காக சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இத்தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்வில் பங்கேற்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க வேண்டிய கடைசி தேதி ஜனவரி 8-ம் தேதி ஆகும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஜனவரி 10-ம் தேதி ஆகும்.
இத்தேர்வு இரு நிலைகளில் நடத்தப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்குரிய தேர்வு காலை 9.30 மணியில் இருந்து 12 மணி வரையும் நடத்தப்பட உள்ளது.
ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி இரண்டிலும் ஆசிரியப் பணியாற்ற விரும்புவோர் இரு தேர்வுகளையும் எழுத வேண்டும். 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகப் பணியாற்ற விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்களும், தொடக்கக் கல்வியில் இரு ஆண்டுகள் டிப்ளமா படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இரு ஆண்டு தொடக்கக் கல்வி டிப்ளமோ அல்லது பட்டப்படிப்புடன் 50 சதவீத மதிப்பெண்களும் மற்றும் பி.எட். படிப்பும் தகுதியாகும். இடஒதுக்கீடுப் பிரிவில் உள்ளோருக்கு 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: முதல் தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தாளையும் எழுதுபவர்களுக்கு ரூ.1000. முதல் தாள் மட்டும் எழுதும் SC/ ST/ PH பிரிவினருக்கு ரூ.300, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தாளையும் எழுதுபவர்கள் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கட்டணம் செலுத்தும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ctet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இத் தேர்வை எழுத தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கு தயங்குகின்றனர் என்ற செய்திகள் வேதனை அளிப்பதாக உள்ளது. இது தவறான கண்ணோட்டம். இத் தேர்வு மிகவும் தெளிவாகவும் எளிதாக இருக்கும்.
இத் தேர்வை நம்பிக்கையுடன் தமிழக ஆசிரியர்கள் எதிர்கொண்டால், எளிதாக தகுதி பெறலாம். தேர்வில் வெற்றி பெற்றால் மத்திய அரசு பள்ளிகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அத்துடன் வெளிநாடுகளில் சென்று பணியாற்றவும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, தமிழகத்தில் இத் தேர்வை நம்பிக்கையுடன் தமிழக ஆசிரியர்கள் எதிர்கொள்ளலாம்.
0 கருத்துரைகள்:
Post a Comment