தமிழகத்தில் 4 லட்சம் பேர் எழுதிய குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கூட கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், கணக்காளர், நேரமுக எழுத்தர் உள்ளிட்ட குரூப் 2-ஏ பிரிவில் அடங்கிய 2 ஆயிரத்து 846 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்றது.
இத் தேர்வை எழுத 4 லட்சத்து 21 ஆயிரத்து 486 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 339 பேரின் தரவரிசை நிலை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் (Community wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண், தரவரிசை நிலை ஆகியவற்றை, தங்களது பதிவு எண்ணை (Register Number) பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பத் தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் அவர்களின் தரவரிசை நிலை (Ranking Position), காலியிட நிலை (Vacancy Position), இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment