Share

Saturday, February 5, 2011

வரலாறும், முக்கியத்துவமும் – பைத்துல் மால் / இஸ்லாமிய கருவூலம் முபாரக் மதனீ

முஸ்லிம் சமுதாயத்தில் இன்று பரவலாகப் பேசப்படுகின்ற ஒன்றாக ‘பைத்துல் மால்’ காணப்படுகின்றது. இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனமே ‘‘பைதுல் மால்’’ ஆகும்.
‘பைத்துல் மால்’ என்ற சொல் பிரயோகம் முதன்முதலில் முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களது காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது. ஆரம்பத்தில் மதீனாவில் உள்ள ‘ஸனஹ்’ என்ற இடத்தில் பைத்துல் மாலை நிறுவி பின்னர் அதை மதீனாவுக்குள் கொண்டு வந்தார்கள். அதன் பொறுப்பாளராக அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரலி) அவர்களை நியமித்தார்கள்.
அபூபக்கர் (ரலி) அவர்கள் பைத்துல் மாலை உருவாக்குவதற்கான முன்மாதிரியை நபி (ஸல்) அவர்களது வாழ்விலிருந்தே பெற்றுக் கொண்டார்கள்.
பைத்துல் மால் என்கின்ற பிரயோகம் நபி (ஸல்) அவர்களால் நேரடியாகப் பயன்படுத்தப் படாவிட்டாலும், கருத்து ரீதியாக அது அவர்களது காலத்தில் இருந்துள்ளதைக் காணலாம்.
ஸகாத்தை வசூலித்து விநியோகம் செய்தல், இஸ்லாமிய அரசுக்குக் கட்டுப்பட்டு வாழக் கூடிய முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து பெறப்பட்ட ‘ஜிஸ்யா’ என்ற வரியை வசூலித்து பொது நலனுக்காகப் பயன்படுத்துதல் போன்ற பணிகள் நபி (ஸல்) அவர்களால் மேற்கொள்ளப்பட்டன.
சேர்க்கப்படும் பொருட்கள் நபி (ஸல்) அவர்களது வீட்டில் வைக்கப்பட்டது. சில வேளைகளில் மஸ்ஜிதுந் நபவியை ஒட்டியதாக ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து உரியவர்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படும்.
நபி (ஸல்) அவர்களது காலத்தில் பைத்துல் மால் முக்கியத்துவம் பெறாமல் இருந்தமைக்கு
1. இஸ்லாமிய அரசு அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தமை
2. இஸ்லாமிய அரசுக்கு வரக்கூடிய சொத்துக்களை தேக்கி வைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படாமை ஆகிய காரணங்களை இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
அபூபக்கர் (ரலி) அவர்கள் பைத்துல் மாலை உருவாக்கிய போதிலும் அவர்களது காலத்திலும் அது பொருட்கள் இன்றி வெறுமையாகவே காணப்பட்டது. ஏனெனில் அவர்களும் கிடைக்கக்கூடிய பொருட்களை உடனே விநியோகித்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களது காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்தபோது பல்வேறு வகையான வரிகள் அரசாங்கத்திற்கு வர ஆரம்பித்தது. இவற்றை பைத்துல் மாலில் சேமிப்பதற்கான ஏற்பாடுகளை கலீபா மேற்கொண்டதுடன் ‘ஸாஹிபு பைத்தில் மால்’ என்ற பதவிப் பெயருடன் ஒருவரை பைத்துல் மாலுக்குப் பொறுப்பாக நியமித்தார்.
மேலும் உமர் (ரலி) அவர்களது காலத்தில் மத்திய பைத்துல் மால் மதீனாவில் இயங்கி வந்தது. அத்துடன் ஏனைய பிரதேசங்களில் அதன் கிளைகள் காணப்பட்டன. உமர் உஸ்மான் (ரலி) அவர்களது காலங்களில் மதீனாவில் பைத்துல் மாலின் பொறுப்பாளராக அப்துல்லாஹ் பின் அல்-அர்கம் (ரலி) அவர்கள் இருந்து வந்தார்கள். அவர்கள் ஓய்வு பெற்றபோது அப் பொறுப்பு ஸைத் பின் தாபித் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இவர்களது காலத்தில் கூஃபாவிலுள்ள பைத்துல் மாலுக்குப் பொறுப்பாளராக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் இருந்து வந்தார்கள்.
நான்காம் கலீபா அலி (ரலி) அவர்களது காலத்திலும் பைத்துல்மால் முன்னைய கலீபாக்களின் காலத்தைப் போன்றே இயங்கி வந்தது.
குலஃபாஉர் ராஷிதுன்களைத் தொடர்ந்து வந்த உமைய்யாக்களது ஆட்சிக்காலத்தில் சில மாற்றங்களுடன் பைத்துல் மால் சிறப்பாக இயங்கி வந்தது. குறிப்பாக உமைய்யா கலீபா உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களது காலத்தில் பைத்துல் மால் மிகவும் சிறப்புற்று விளங்கியது. அவரது காலத்தில் பல பைத்துல்மால்கள் காணப்பட்டதாக இப்னு ஸஅத் என்ற அறிஞர் தனது தபகாத் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
பின்னர் அப்பாஸியர்களது ஆட்சிக் காலத்தில் பைத்துல்மால் என்பது ஒரு தனி இலாகாவாகத் செயல்பட்டது. உமைய்யாக்களது காலத்தில் காணப்படாத பல வரிகள் அப்பாஸியர்களால் அறிவிக்கப்பட்டன என்பது நோக்கத்தக்கது.
ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்து அப்பாஸிய காலத்தில் இரண்டு வகையான பைத்துல்மால்கள் இருந்ததை அறிய முடிகின்றது. அவற்றில் ஒன்று கலீபாவின் நேரடிக் கண்காணிப்பில் செலவு செய்யப்பட்டது. மற்றையது ஒரு அமைச்சரால் கையாளப்படக் கூடியதாக காணப்பட்டது.
முஸ்லிம் ஸ்பெயினில் பைத்துல்மால் என்பது ஆரம்ப காலங்களை விட வேறுபட்ட நிலையில் காணப்பட்டது. அது பொதுக் கருவூலத்தை விட்டு வேறுபட்டு வெறும் வக்ஃப் சொத்துக்களுக்கு மட்டும் பொறுப்பானதாக இருந்து வந்தது. அங்கு பைத்துல் மாலின் நிர்வாகத்தை நீதிபதியே மேற்கொள்ளக் கூடியவராக இருந்தார். அதன் சொத்துக்கள் கொரடோவா (குர்துபா) என்ற பெரிய பள்ளி வாசலின் இமாம் தங்குவதற்காகத் தயார் செய்யப்பட்டிருந்த அறையில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தது.
மேலும், அதிலுள்ள சொத்துக்கள் பைத்துல் மாலுக்கு பொறுப்பானவரால் தீர்மானிக்கப்படுவோருக்கு வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக ஏழைகள், பள்ளிவாசல்கள் பராமரிப்பு, மஸ்ஜிதுகளில் பணியாற்றுவோருக்கான ஊதியம், கல்வி நிறுவனங்களை உருவாக்கல், ஆசிரியர்களுக்கான சம்பளம் போன்றவற்றிற்கு செலவிடப்பட்டது. இந்நிலை ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டு வரை பின்பற்றப்பட்டு வந்தது.
அவ்வாறே உஸ்மானியர் ஆட்சியிலும் பைத்துல் மால் சிறப்பாக இயங்கி வந்துள்ளதை அறிய முடிகின்றது. பொதுவாக அவர்களது காலத்தில் அரசாங்கத்திற்கு வரும் சொத்துக்களும், மற்றும் சட்ட ரீதியாக பொதுக் கருவூலத்திற்கு வரும் சொத்துக்களுமே பைத்துல்மாலின் சொத்துக்களாகக் கொள்ளப்பட்டன.
ஆக, நபி (ஸல்) அவர்களது காலம் தொடக்கம் இஸ்லாமிய வரலாற்றில் பைத்துல் மால் என்பது மிக முக்கியமான ஒரு நிறுவனமாக இயங்கி வந்திருப்பதை அறிய முடிகின்றது.
இஸ்லாமிய வரலாற்றில் பைத்துல்மாலுக்கான வருமான வழிகளாகப் பின்வருவன காணப்பட்டன.
1. ஸகாத்
2. கனீமத் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு
3. நிலத்திலிருந்து அகழ்ந்து எடுக்கப்படக் கூடிய தங்கம், வெள்ளி, இரும்பு போன்றவற்றில் ஐந்தில் ஒரு பங்கு
4. புதையல் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு
5. ஃபைஉ (யுத்தமில்லாமல் இறை நிராகரிப்பாளர்களிடமிருந்து எடுக்கப்படும் வரி), கராஜ் (முஸ்லிம்களின் நிலங்களைப் பயன்படுத்துவதற்காக அறிவிக்கப்படும் வரி), ஜிஸ்யா (இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில் முஸ்லிமல்லாதோர் வசிப்பதற்காக அறிவிக்கப்படும் வரி), உஷூர் (வியாபாரத்திற்காக அறவிக்கப்படும் வரி), முர்தத் (இஸ்லாத்தை விட்டு மதம் மாறியவன்) மரணிக்கும்போது விட்டுச் செல்லும் சொத்துக்கள், திம்மீக்கள் (இஸ்லாமிய அரசுக்கு கட்டுப்பட்டு வரி செலுத்தி வாழும் முஸ்லிம் அல்லாதவர்கள்) மரணிக்கும்போது அவர்களுக்கு வாரிசுகள் இல்லாவிட்டால் அவர்களின் சொத்துக்கள், கனீமத்தாகக் கிடைத்த விவசாய நிலங்கள் போன்றவை ‘பைஉ’ என்பதில் அடங்கும்.
6. அன்பளிப்புகள், நன்கொடைகள், பைத்துல் மாலுக்கு வஸிய்யத் செய்யப்பட்ட சொத்துக்கள்
7. நீதிபதிகள், பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்படும் அன்பளிப்புகள்
8. நாட்டு மக்கள் மீது விதிக்கப்படும் வரிகள்
9. உரிமையாளர்கள் இல்லாத பொருட்கள்
10. வாரிசுதாரர்கள் யாரும் இல்லாமல் மரணிப்பவரின் சொத்துக்கள்
11. அபராதத் தொகை
நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி, பொருளாதாரப் பிடியில் மக்கள் சிக்கித் தவிக்கும் இக்கால கட்டத்தில் பைத்துல்மாலின் தேவை மிக அவசியமானதாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடுகளில் இதன் தேவை மிக மிக அவசியமானதாகும்.
ஸகாத் ஒரு கூட்டுக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களது காலத்திலோ, குலஃபாஉர் ராஷிதூன்கள் காலத்திலோ தனிப்பட்ட முறையில் ஸகாத் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அதை சரியான முறையில் வசூலித்து உரியவர்களுக்கு சேர்க்கும் போதுதான் ஸகாத் என்ற வார்த்தையின் மூலம் எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்றான வறுமையை ஒழிக்க முடியும். இதை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டுமென்றால் பைத்துல்மால் போன்ற ஒரு நிறுவனம் ஒவ்வொரு ஊருக்கும் அவசியப்படுகின்றது.
மனிதனுடைய பொருளாதாரத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. திடீரென அவனுக்கு ஏற்படும் தேவைகளை நிறைவு செய்வதற்கான பொருளாதார வசதி இல்லாதபோது, அவன் வட்டிக் கடைகளை நாட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றான். எனவே அவனை வட்டி என்ற வன்கொடுமையில் இருந்து விடுவிப்பதற்கு பைத்துல் மால் போன்ற நிறுவனங்கள் அவசியம் தேவைப்படுகின்றன.
அது மட்டுமல்ல, மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான நிதியுதவிகளை வழங்குதல், நோயாளிகளின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுதல், அநாதைக் குழந்தைகளைப் பராமரித்தல், அநியாயமாக சிறைகளில் வாடுவோருக்கு அவர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், அவர்களது குடும்பங்களைப் பராமரித்தல், திருமண வயதையும் தாண்டி திருமணம் முடிக்க வசதியற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு உதவுதல் போன்ற பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்கு இன்று கிராமங்கள் தோறும் பைத்துல்மால் போன்ற சமூக நிறுவனங்கள் உருவாக்கப்படுவது அவசியமாகும்.

0 கருத்துரைகள்: