Share

Saturday, December 25, 2010

ஹஜ் யாத்திரை போல இஸ்ரேலுக்கு கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் செய்ய உதவுவேன்-ஜெ

அருமனை: மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்து கிருஸ்துவ மக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இப்போது தேர்தல் வரும் நிலையில் கிருஸ்துவ சமுதாயத்தினரின் வாக்குகளை கவர 3 உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.

அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 13வது கிறிஸ்துமஸ் விழா நேற்று கோலாகலமாக நடந்துத. இதில் சிறப்பு விருந்தினராக ஜெயலலிதா கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். பின்னர் பலருக்கு நல உதவிகளையும் வழங்கினார்.

நிழ்ச்சியில் அவர் பேசுகையில், கிறிஸ்தவ நிகழ்ச்சிகளிலும், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்பது புதிதல்ல. எனது பள்ளிக்காலத்தை நான் கிறிஸ்தவ பள்ளியில்தான், கிறிஸ்தவ மக்களுடன்தான் கழித்தேன்.

நான் படித்த சென்னை சர்ச்பார்க் கான்வென்ட், பெங்களூர் பிஷப் காட்டன் கான்வென்ட் உள்ளிட்டவை கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களே. கிறிஸ்தவ சமுதாயத்தினர் கல்வி, மருத்துவத்தில் ஆற்றி வரும் சேவை மகத்தானது.

சிறு வயதிலேயே நான் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பாடும் குழுவில் இடம் பெற்றிருந்தேன். பெங்களூர் பள்ளியில் படித்தபோது ஓய்வு நேரங்களில் பள்ளி வளாகத்தில் உள்ள சேப்பலுக்குச் சென்று அங்குள்ள நூலகத்தில் இருக்கும் கிறிஸ்துவின் கதைகளைப் படிப்பது எனது வழக்கம்.

கிறிஸ்துவை பொறுத்தமட்டில் மிகப்பெரிய அன்பின் கதை என்று சொல்வார்கள். எனவே நானும் உங்களுக்கு ஒரு கதை சொல்ல எண்ணுகிறேன்.

ஆனி என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்கு கடவுள் பக்தி அதிகமாக இருந்தது. தினமும் சேப்பல் சென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வாள். அவளிடம் இயேசு மிகுந்த அன்பு கொண்டிருந்தார். ஒருநாள் சேப்பலுக்கு வந்த ஆனியிடம், உனக்கு எதுவும் வேண்டுமா? என்று இயேசு கேட்டார். அதற்கு ஆனி, உங்களை பார்க்க வேண்டும் என்று பதில் சொன்னாள்.

அதற்கு இயேசு, சரி பார்க்கலாம். எப்போது பார்க்கலாம், எங்கு பார்க்கலாம் என்று ஆனியிடம் கேட்டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்கள் இருக்கும் நிலையில், ஆனி தனது வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வரவேண்டும் என்று இயேசுவிடம் கூறினாள். அவள் சொன்னபடியே கிறிஸ்துமஸ் நாளும் வந்தது. ஆனி, இயேசுவை சந்திக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தாள்.

அவள் வீட்டுக்கு அன்று எத்தனையோ பேர் வந்து சென்றார்கள். சொந்தக்காரர்கள், நண்பர்கள் என ஏராளமானபேர் வந்து, விலை உயர்ந்த பரிசுப்பொருட்களையும், கேக் வகைகளையும் கொடுத்து சென்றார்கள். அந்த கேக் வகைகளையும், பரிசு பொருட்களையும் தனது வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு எல்லாம் ஆனி வாரிக்கொடுத்தாள். ஆனாலும் தான் எதிர்பார்த்த இயேசு தனது வீட்டுக்கு வராமல் போனது அவளுக்கு வருத்தம் அளித்தது. அதனால் அவளுக்கு அழுகை வந்தது.

கிறிஸ்துமஸ்சும் முடியப்போகிறது, இயேசு வரவில்லையே என்று அவள் ஏங்கிப்போனாள். அந்த ஏக்கத்தால் அவள் தூங்கியும் போனாள். தூக்கத்தில் அவளை யாரோ கூப்பிடுவது போல் தெரிந்தது. அந்த குரல் சேப்பலில் கேட்ட குரலாகவும் இருந்தது. தன்னை கூப்பிட்டது இயேசுதான் என்பதை புரிந்துகொண்ட ஆனி, ஏன் கிறிஸ்துமஸ்சுக்கு தனது வீட்டுக்கு வரவில்லை என்று கேட்டாள். அதற்கு இயேசு, நான் உன் வீட்டுக்கு வந்தேன். எனக்கு நீ பரிசு மற்றும் இனிப்புகளை வழங்கி, மெர்ரி கிறிஸ்துமஸ் என்று சொன்னாயே என்று கூறினார்.

அதற்கு ஆனி, நீங்கள் எங்கே வந்தீர்கள், நான் எப்போது பரிசு கொடுத்தேன் என்று கேட்டாள். உங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் எப்போது வந்தார்கள்? என்று இயேசு கேட்டார். காலையில் வந்தார்கள் என்று ஆனி பதில் கூறியதோடு, அவர்களோடு ஒரு தாத்தா வந்தார். அவருக்கு ஒரு போர்வை கொடுத்தேன். அவருக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் சொன்னேன் என்றாள்.

அந்த முதியவர்தான் நான் என்றார் இயேசு. ஆனிக்கு ஒரே ஆச்சரியம். அப்படியா என்று வியந்து போனாள். முன்பின் தெரியாதவர்களுக்கு செய்ததெல்லாம் எனக்கே செய்தாய் என்று இயேசு சொன்னதை உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் செய்தியாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

இங்கு பேசிய சகோதரர் சுரேஷ், வரப்போகிற தேர்தலில் வெற்றி பெற்று, கோட்டையில் முதல்வராக நீங்கள் அமர்ந்ததும், 3 கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் செல்ல உதவி செய்வேன்:

முதல் கோரிக்கையாக, இஸ்லாமிய மக்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்துக்கு அரசு மானியம் அளித்து உதவி செய்வது போல, கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளவும் அரசு உதவி செய்ய வேண்டும் என்றார். நிச்சயமாக உங்களது அனைவரது ஆதரவோடும், அன்போடும் நமது ஆட்சி அமையும் பட்சத்தில் இந்த கோரிக்கை உடனே நிறைவேற்றித்தரப்படும்.

பட்டா நிலத்தில் தேவாலயம் கட்ட உதவுவேன்:

2-வதாக அவரவர் பட்டா நிலத்தில் தேவாலயம் கட்ட தற்போது தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை நீக்கப்பட வேண்டும் என்றார். அவரவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் யார் எதை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். இதில் தேவாலயம் கட்ட யார் தடை சொல்வது? அவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? கர்த்தரின் அருளால் நிச்சயமாக கழக ஆட்சி அமைந்தால் இந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.

ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கும் சலுகைகள்:

3வதாக ஆதிதிராவிடர்களுக்கு அரசால் வழங்கப்படுகிற சலுகைகள், ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார். இதற்கு ஒரு கமிஷன் இருக்கிறது. அந்த கமிஷனிடம் இந்த கோரிக்கையை வைத்து தேவையான ஆணைகளை பெற்று கர்த்தர் அருளால் கழக அரசு அமைந்தால் நிச்சயமாக இந்த கோரிக்கையும் நிறைவேற்றித்தரப்படும் என்றார் ஜெயலலிதா.

கடந்த முறை முதல்வராக இருந்தபோது மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்து கிருஸ்துவர்களின் வெறுப்புக்குள்ளானவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இப்போது தேர்தல் வரவுள்ள நிலையில் அவர்களது வாக்குகளைக் குறி வைத்து உறுதிமொழிகளை அள்ளித் தந்துள்ளார்.

ஜெ.வின் கிறிஸ்துமஸ் வாழ்த்து:

இதற்கிடையே, கிறிஸ்துமஸையொட்டி ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி:

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று போதித்த இயேசு பெருமான் அவதரித்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, அன்புக்கு பொறாமையில்லை, அன்பு தன்னைப் புகழாது, இறு மாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது என்று அன்பு குறித்து பரிசுத்த வேதாகமத்தின் பதின் மூன்றாவது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்பு இல்லாவிட்டால் எந்தவிதப் பயனும் இல்லை என்பதைத் தான் புனித வேதாகமம் உணர்த்துகிறது. இயேசு பெருமான் போதித்த அன்பிற்கு எதிரான சூழ் நிலை தற்போது நிலவுவ தன் காரணமாகத் தான், அநியாயங்களும், அக்கிரமங் களும், அராஜகங்களும் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கின்றன.

அகிலத்தை அறவழியில் நடத்தும் ஆற்றல் பெற்ற அருள்மொழிகளை போதித்த இயேசு பெருமான் பிறந்த இந்த நன்னாளில், வன்முறயால் வதைப்படும் தமிழகம் விரைவில் நற்கதி அடையட்டும், அன்பு, அமைதி, ஆனந்தம் உயிர் தெழட்டும்! என்று இயேசு பெருமானை பிரார்த் திப்பதோடு, எனது இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்கிக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்
frm-tt http://thatstamil.oneindia.in/news/2010/12/24/jaya-3-promises-christians-arumanai-festival.html

0 கருத்துரைகள்: