Share

Saturday, December 25, 2010

இலங்கைத் துணை இராணுவக் குழுக்களின் குற்றச்செயல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது

சனி, டிசம்பர் 18, 2010
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அரசின் மேலும் பல தகவல் பரிமாற்றங்களைக் கடந்த வியாழக்கிழமை விக்கிலீக்ஸ் செய்திக்கசிவு தளம் வெளியிட்டுள்ளது. இவை இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு இருதரப்பாரையும், கடுமையாக விமர்சிப்பவையாக உள்ளன. 2007 ஆண்டில் இலங்கை அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான தந்திச் செய்திகளை லண்டனின் கார்டியன் பத்திரிகை இப்போது வெளியிட்டுள்ளது.

இலங்கையில் செயற்படும் கருணா தலைமையில் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்த துணை இராணுவப் பிரிவு, மற்றும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி ஆகிய குழுக்கள் கொலை, சிறார் கடத்தல் மற்றும் தொழில்ரீதியான விபச்சாரம் ஆகிய செயல்களில் இலங்கை அரசுக்குத் துணைபோயிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

முன்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா அரசு இந்தத் துணை இராணுவக் குழுக்களுக்கு பணம் கொடுத்து ஆதரவளித்து வந்ததாகவும், மகிந்த ராசபக்ச ஆட்சிக்கு வந்ததும், பணஉதவிகளை நிறுத்தி, பதிலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழ் வர்த்தகர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையை கருணா குழுவினருக்கும் ஈபிடிபி குழுவினருக்கும் கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வர்த்தகர்களை இவர்கள் மிரட்டி பணம் பறித்து கோத்தபயாவுக்கு கொடுத்து வந்தனர்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த ராணுவத்தினருக்காக விபச்சாரத்தில் ஈடுபடுமாறும் பெண்களை இக்குழுக்கள் அனுப்பி வைத்தனர். இதற்காக தனியாக ஒரு விபச்சாரக் குழுவையும் அவர்கள் வைத்திருந்தனர்.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்த ராணுவத் தளபதிகளை அங்கு தமிழ் எம்.பிக்கள் செய்துவரும் சில வேலைகளில் தலையிட வேண்டாம் என கோத்தபாய அறிவுறுத்தினார் எனவும் அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் கட்டாயமாக படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன.

0 கருத்துரைகள்: