Share

Monday, December 8, 2014

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு அட்டவணையில் குளறுபடி: 15 நாட்களுக்கு முன்பாக துவங்குவதால் அதிருப்தி

 எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு, 15 நாட்களுக்கு முன்னதாக துவங்குவதால், போதிய வகுப்பு கிடைக்காததாலும் மற்றும் திருப்புத் தேர்வு எழுத முடியாததாலும், மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகத்தின் மூலம் நடத்தப்படும், ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத் தேர்வுகள், ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். அதில், மார்ச் மாதம், ப்ளஸ் 2 தேர்வும், ஏப்ரல் மாதம் எஸ்.எஸ்.எஸ்.ஸி., தேர்வும், தனித்தனியாக நடத்துவதால், கூடுதல் செலவு ஏற்படுவதாக கூறி, நடப்பு கல்வியாண்டில், இரண்டு தேர்வையும், ஒரே நேரத்தில் நடத்த முடிவு செய்து, அதற்கேற்றார்போல், தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு அட்டவணையில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும், மார்ச், 19ம் தேதி முதல் மொழிப்பாடம், 20ம் தேதி இரண்டாம் மொழிப்பாடம், 25ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 26ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 30ம் தேதி கணிதம், ஏப்ரல், 6ம் தேதி அறிவியல், 10ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படும். இந்த அட்டவணையில், ஒவ்வொரு கல்வியாண்டும், மாணவர்கள் படித்தல் மற்றும் தேர்வுக்கு தயாராகும் நாட்கள் குறைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, ஒரு சில நாட்களுக்கு பின்னர், எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு துவங்கும். ஆனால், நடப்பு கல்வியாண்டில், கிட்டத்தட்ட ஒரே நேரத்தில், இரண்டு பொதுத்தேர்வும் நடத்தப்படுகிறது. கடந்த, 2011ம் ஆண்டு, மார்ச், 28ம் தேதி துவங்கி, ஏப்ரல், 11ம் தேதி, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிந்தது. கடந்த, 2012ம் ஆண்டு, ஏப்ரல், 4ம் தேதி துவங்கி, ஏப்ரல், 23ம் தேதி முடிந்தது. கடந்த, 2013ம் ஆண்டு, மார்ச், 26ம் தேதி துவங்கி, ஏப்ரல், 9ம் தேதி முடிந்தது. ஆனால், நடப்பாண்டு, மார்ச், 19ம் தேதி துவங்கி, ஏப்ரல், 10ம் தேதி முடிகிறது. இதில், கடந்த, 2012ம் ஆண்டோடு ஒப்பிட்டு பார்த்தால், 15 நாட்கள் முன்கூட்டியே நடத்த முடிவு செய்துள்ளதால், வகுப்பு எடுக்கும் நாட்கள் குறைக்கப்பட்டது. மேலும், ஆங்கிலம் இரண்டு தாளுக்கும், படிப்பதற்கு விடுமுறை கிடையாது. ஆனால், அறிவியல் பாடத்திற்கு, 25 மதிப்பெண்ணுக்கு, செய்முறை தேர்வுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டாலும், அந்த பாடத்திற்கு, ஆறு நாட்கள் விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில பாடத்தை பொறுத்தமட்டில், முதல் தாளில், 45 மதிப்பெண் மணப்பாடம் செய்தும், மீதமுள்ள வினாவுக்கு, புரிந்தும் எழுத வேண்டும். அதேபோல், இரண்டாம் தாளில், 35 மதிப்பெண்ணுக்கு மணப்பாடம் செய்தும், மீதமுள்ள வினாவுக்கு, புரிந்தும் எழுத வேண்டும். வரும் சில நாட்களில் துவங்கவுள்ள, அரையாண்டு தேர்வுக்கு பின், நான்கு முறை திருப்புத் தேர்வு நடத்த வேண்டும். ஆனால், பொதுத்தேர்வு முன்கூட்டியே நடப்பதால், இரண்டு திருப்பு தேர்வுக்கான அட்டவனை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை அவசரம் அவசரமாக, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வை நடத்தி முடிப்பதால், மாணவர்கள் முழுமையாக பாடங்களை கற்க முடியவில்லை. ஆசிரியர்களும் அவசரகதியில், பாடங்களை முடித்து வருகின்றனர். எனவே, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


0 கருத்துரைகள்: