Share

Friday, October 29, 2010

அருந்ததி ராயின் கருத்தினால் பெரும் சர்ச்சை
அருந்ததி ராய் (ஆவணப்படம்)
அருந்ததி ராய் (ஆவணப்படம்)
கஷ்மீர், எப்போதும் இந்திய நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை என்று எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்த கருத்து இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிவில் சமூகங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த, -சுதந்திரம் ஒன்றுதான் வழி - என்ற தலைப்பிலான கருத்தரங்கில், அருந்ததி ராய் கலந்துகொண்டு பேசினார். இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட கஷ்மீர் பிரச்சினை தொடர்பான அந்தக் கருத்தரங்கில், கஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, மாவோயிஸ்டுகள் ஆதரவுத் தலைவர் வரவர ராவ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

அந்தக் கருத்தரங்கில் பேசிய அருந்ததி ராய், 'கஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசும் கூட அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது' என்று கூறினார். சுதந்திரம் பெற்றவுடனே, இந்தியா, காலனி ஆதிக்க சக்தியாக மாறிவிட்டது என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரிவினைவாதத் தலைவர் கிலானியும் இந்தியாவின் போக்கை மிகக் கடுமையாகச் சாடினார்.

இந்தியாவுக்கு எதிராக தலைநகர் டெல்லியிலேயே பிரிவினைவாதக் குரல்கள் தீவிரமாக ஒலிக்கும் நிலையில், மத்திய அரசு மெளனம் காத்து வருவதாக பிரதான எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியது.

அதையடுத்து, அருந்ததி ராய் உள்ளிட்டவர்களின் பேச்சு தொடர்பில் டெல்லி காவல் துறையின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. காவல் துறை பெற்ற பூர்வாங்க சட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், அருந்ததி ராய் மற்றும் கிலானி மீது, நாட்டு்ககு எதிராக துவேஷத்தைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ய முடியும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த ஆலோசனைகளை, சட்ட அமைச்சகத்தின் ஆய்வுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பக்கூடும் என்றும் அதன்பிறகு இந்தப் பிரச்சினையில் அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், கஷ்மீர் தொடர்பாக அருந்ததி ராய் தெரிவித்த கருத்து, துரதிர்ஷ்டவசமானது என்று சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

'நீதி கேட்போரை சிறையிலடைப்பது பரிதாபமானது'

இதற்கிடையே, தனது பேச்சின் மூலம் எழுந்துள்ள சர்ச்சை குறித்து, அருந்ததி ராய், கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து செவ்வாய்க்கிழமை அறி்க்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அருந்ததி ராய் (ஆவணப்படம்)
அருந்ததி ராய் (ஆவணப்படம்)
'இங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். நானும் என்னைப் போன்ற விமர்சகர்களும் கடந்த பல ஆண்டுகளாக எழுதி வரும், பேசி வரும் கருத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். எனது பேச்சை முழுமையாகப் படித்தவர்களுக்கு, அது நீதிக்கான உரிமையின் குரல் என்பது புரியும். உலகின் மிகக் கொடூரமான ராணுவ ஆதிக்கங்களில் ஒன்றின் கீழ் வாழும் கஷ்மீர் மக்களின் நியாயத்துக்காக நான் பேசினேன்' என்று அருந்ததி ராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

'எழுத்தாளர்கள் தங்கள் மனம் திறந்து பேசுவதை இந்த அரசு அடக்க நினைப்பது பரிதாபமானது. மதவாதக் கொலைகாரர்கள், பெரிய நிறுவனங்களின் ஊழல்வாதிகள், கொள்ளையர்கள், ஆகியோர் சுதந்திரமாக நடமாடும் நிலையில், நீதி கேட்போரை சிறையிலடைப்பது பரிதாபமானது'என்று அருந்ததி ராய் தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

அருந்ததி ராய் எழுப்பியுள்ள சர்ச்சை குறித்துக் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி, அரசியல் பின்னணியே இல்லாத அருந்ததி ராய், ஒன்றும் இல்லாத விஷயத்தைப் பெரிய பிரச்சினையாக்குகிறார் என்று கூறியுள்ளார்.

ஆனால், அருந்ததி ராயைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரஷாக் ஜாவ்டேகர்