Share

Monday, May 31, 2010

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

مَن جَاء بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَن جَاء بِالسَّيِّئَةِ فَلاَ يُجْزَى إِلاَّ مِثْلَهَا وَهُمْ لاَ يُظْلَمُونَ 160

6:160. நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.


நன்மைக்குப் பத்து ! தீமைக்கு ஒன்றே !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் அளவற்ற அருளாலன், நிகரற்ற அன்புடையோன் என்பதற்கு மேற்காணும் திருமறை வசனம் மிகப் பெரிய சான்றாகும்.

சுவனத்திற்கள் நுழைந்து அதன் எண்ணிலடங்கா இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நன்மைகள் அதிகம் சேர்த்தாக வேண்டும் அதனால் மக்கள் நற்செயல்கள் புரியம் போது அதை ஒன்றுக்குப் பத்தாக்குகிறான் அளவற்ற அருளாலன் அல்லாஹ்.

மக்கள் நற்செயல்கள் புரிந்து நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்காகவும், தீய செயல்களிலிருந்து தங்களை தடுத்துக் கொள்வதற்காகவும் அவரவர்கள் பேசும் மொழியிலிருந்தே தூதர்கள் தேர்வு செய்யப்பட்டு அவ்வப்பொழுது தேவையான விளக்கங்களை ( வேதங்களை ) அனுப்பிக் கொண்டிருந்தான்.

திருமறைக்குர்ஆனுடன் வேதங்களின் வருகை முற்றுப் பெற்றது.

முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் இறைத்தூதர்களின் வருகை முற்றுப்பெற்றது.

தூதர்கள், மற்றும் வேதங்களின் வருகை முற்றுப் பெற்றதன் பின்னரும் கூட இறுதி தூதர் முஹம்மது நபியின் சமுதாய மக்களில் திருமறைக் குர்ஆனையும், அவர்களின் தூய்மையான வாழ்க்கை வரலாற்றையும் படித்தறிந்தவர்களைக் கொண்டு மேற்காணும் நன்மை, தீமைகளைப் பிறித்தறிவிக்கும் அரும்பணியை மேற்கொள்ளும்படி இறைவன் ஏவினான். 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

நன்மைக்குப் பத்து !

நன்மை, தீமைகளைப் பிரித்தறிவிக்கும் அரும் பணிகளை செய்யக்கூடிய நன்மக்களாலும், அதை ஏற்றுக் கொண்ட நன்மக்களாலும் அவர்களும் மனிதர்கள் என்ற ரீதியில் சில நேரம் தவறிழைத்து விடும் சூழ்நிலைகள் ஏற்பட்டு விடுவதுண்டு அதனால் பதியப்படும் பாவத்தால் அவர்களுடைய முந்தைய தியாகங்கள் அடிபட்டு விடாமல் இருப்பதற்காக அவர்களின் மீது கருணை கொண்ட அல்லாஹ் அதை ஒன்றாக மட்டுமேப் பதியச்செய்தான். 6:160. நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

தீமைக்கு ஒன்று !

நற்காரியங்களுக்கு பதியப்படும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவே தீயகாரியங்களுக்கும் பதியப்பட்டால் மக்களில் யாரும் அதை அநீதி என்று சொல்லப்போவதில்லை ஒன்றுக்கு ஒன்று கணக்கு சரிதான் என்றே கணிப்பர்;. உலகில் நற்காரியங்களை விட தீயகாரியங்களே மிகைத்திருப்பதால் தீமைக்கும் ஒன்றுக்கு பத்து மடங்குகளாக்கினால் தீமைகள்,நன்மைகளை முந்தி விடும் அதன் மூலம் சுவனம் தடுக்கப்பட்டால் அது அவனுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அனைத்து மக்களின் மீதும் அளப்பரிய அன்புள்ளம் கொண்ட அல்லாஹ் தொலைநோக்கு சிந்தனையுடன் அதை ஒன்றாக மட்டுமேப பதிகிறான்.

அந்த ஒன்றையும் செயலிழக்கச் செய்வதற்கான அல்லாஹ்வின் சலுகை !

நிரந்தரமான சுவனத்தின் இன்பத்தை அனுபவிப்பதற்காக அந்த ஒரு பாவமும் அவருடன் நிரந்தரமாக தங்கி விடாமல் அதையும் செயலிழக்கச் செய்வதற்காக அதன் பின்னர் செய்யும் நன்மையைக் கொண்டு அதை அழித்து விடுவதாகவும் பலஹீன மனிதனின் மீது கருணை கொண்ட நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ் மேலும் ஒரு மகத்தான சலுகையை வழங்குகிறான். ...நன்மைகள் தீமைகளை அழித்து விடும். இது படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை. 11:114.

அந்த ஒன்றையும் தடுத்துக் கொள்வதற்கான அண்ணலாரின் அழகிய உபதேசங்கள்.

நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! ஒரு தீங்கைத் தொடர்ந்து நல்லதை செய்துகொள்! அந்த நன்மை தீங்கை அழித்துவிடும், மக்களிடம் நற்குணத்துடன் நடந்துகொள் என்று இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறியதாக அபூதர் மற்றும் முஆத் இப்னு ஜபல்(ரலி)ஆகியோர் அறிவிக்கின்றனர்.நூல்: திர்மிதி.

மேலே கூறப்பட்ட நபிகளாரின் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! மக்களிடம் நற்குணத்துடன் நடந்துகொள் என்ற முத்தான இரண்டு உபதேசங்களை யார் தன் வாழ்நாளில் முறையாக கடைப்பிடித்தொழுகுவார்களோ அவர்களால் அதிகபட்சம் தீய காரியங்களிலிருந்து விலகி வாழ முடியும்.

எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொன்டால் !

Ø எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும், எல்லா நிலைகளிலும் அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற அச்ச உணர்வு ஒருவருக்கு உருவானால் அவர் முதலாளியின் அறிவுக்கு எட்டாது என்றெண்ணி வேலை செய்யும் நிருவனத்தில் தனது திறமைக்கேற்ப செய்யத் துணிய மாட்டார், நேர்மையாக பணியாற்றுவார், சொந்த நிருவனம் போல் கருதி நடந்து கொள்வார்.

Ø மக்களில் அதிகமானோருக்கு விளங்கிக் கொள்ள முடியாது என்றுக் கருதி சீனாவிலிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து ஜப்பான், அமெரிக்கா என்ற ஸ்டிக்கர் ஒட்டி அதிக விலைக்கு விற்பனை செய்து மக்களை ஏமாற்ற துணிய மாட்டார், குறைந்த லாபமாக கிடைத்தாலும் உண்மையைப் பேசி விற்பனை செய்வார்.

Ø அடுத்தவனின் (அப்பாவிகளின்) சொத்தை அபகரிக்க ஆசைப்பட மாட்டார், அடுத்தவனின் மனைவியை அனுபவிக்க ஆசைப்பட மாட்டார் தனக்கு உரிமையற்றவைகளிலிருந்து விலகி விடுவார்.

மக்களிடம் நற்குணத்துடன் நடந்து கொண்டால் !

Ø தன்னைப் போன்ற பிற மனிதர்களிடம் நற்குணத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற நற்சிந்தனை உருவானால்,அவரிடம் பொதுநலச் சிந்தனை மேலோங்கிவிடும்.

Ø பொதுநலம் பேணும் உயர் சிந்தனை உருவாகி விட்டால் சுயநலம் செயலிழந்து விடும், சுயநலமே பெரும்பாலான தவறுகள் இழைப்பதற்கு காரணமாகிறது,

Ø பொதுமக்களிடம் நற்குணத்துடன் நடந்து நன்மதிப்பைப் பெற்றவர் தவறு செய்யத் துணிய மாட்டார்.

Ø தனிமையில் அல்லாஹ்வுக்கு அஞ்சுவார், வெளியில் மக்களின் விமர்சனத்திற்கு வெட்குவார்,

கன்ட்ரோலை மீறி விடும் அன்றாட காரியங்கள்

அண்ணலாரின் அறவுரைகளின் படி அல்லாஹ்வை அஞ்சிக் கொண்டும், பொதுமக்களிடம் நற்குணத்துடனும் பழகிக் கொண்டும் ஒருப் பாவம் கூட செய்யாமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் மக்களால் கூட கீழ்காணுமாறு சிறிய பாவங்கள் அவர்களுடைய கன்ட்ரோலை மீறி விடுவதை அன்றாட வாழ்;க்கையில் காண்கிறோம்.

உதாரணத்திற்கு

Ø வாகனம் ஓட்டும் பொழுது ஒருவர் ஓவர்டேக் செய்து விட்டால் அல்லது நகரச் சொல்லி காதைக் கிழிக்கும் ஹாரன் கொடுத்து விட்டால் அதனால் கோபம் தலைக்கேறி கண்ணாடியைத் திறக்காமல் அவரை இன்ன வார்த்தைகள் என்றில்லாமல் திட்டிவிடுகிறோம், கண்ணாடியைத் திறக்காமல் திட்டுவதால் அதை அவர் செவியுறாமல் இருக்கலாம் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ் செவியுறாமல் இருப்பானா ? நம்முடன் இருக்கும் மலக்குகள் அதை பதியாமல் விட்டு விடுவார்களா ?

Ø வீதியில் போகின்ற பெண்களை வீட்டுக்காரம்மா உடன் வராததால் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசிக்கச் சொல்லி ஷைத்தான் தூண்டுகிறான் வீட்டில் விட்டு வந்த வீட்டுக்காரம்மாவுக்கு இது தெரியாமல் போகலாம். எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ் இதைப் பார்க்காமல் இருப்பானா ? நம்முடன் இருக்கும் மலக்குகள் இதைப் பதியாமல் விட்டு விடுவார்களா ?

Ø பணி புரியும் அலுவலகத்தின் நிர்வாக மேலாளரிடம் கோப்புகளை காண்பிக்கும் பொழுது அவர் எதாவது குறையை சுட்டிக்காட்டினால் அங்கு தலையை அசைத்து விட்டு வெளியில் வந்ததும் மனதுக்குள் அல்லது சக ஊழியரிடம் அவரை வசைப்பாடுகிறோம், மேலாளர் அதை செவியுறாமல் இருக்கலாம் ஆனால் எந்நேரமும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ் செவியுறாமல் இருப்பானா? நம்முடன் இருக்கும் மலக்குகள் அதை பதியாமல் விட்டு விடுவார்களா ?

Ø ீட்டிற்குள் நுழைந்தால் வெளியில் நடந்த டென்ஷன்களை மனைவியின் தலையில் கொட்டித் தீர்க்கின்றோம்.

Ø தொலைகாட்சியின் முன்பு அமர்ந்தால் நியூஸ் மட்டும் பார்க்காமல் எண்ணிலடங்கா சேனல்களில் புகுந்து கொண்டு எப்பொழுது அதிலிருந்து விடுபடுவோம் என்றே தெரியாத நிலை.

Ø வீட்டில், அல்லது அலுவலகத்தில் இருக்கும் இன்டர்நெட்டில் புகுந்து விட்டு வெளியேறும் பொழுது கண்கள் கற்புடன் திரும்பபுவதற்கு உத்தரவாதமில்லாத நிலை.

Ø இவ்வாறாக வீட்டை விட்டு புறப்பட்டு சொந்த அலுவல்களை முடித்துவிட்டு மீண்டும் வீட்டை வந்தடைந்து தொலைகாட்சி, மற்றும் இணையத்திற்குள் புகுந்து வெளியே வருவதற்குள் நம்முடைய கன்ட்ரோலை மீறுகின்ற எத்தனையோ சிற் சிறிய பாவகாரியங்கள் சொல்லி மாளாது.

என்ன தான் தீர்வு !

புள்ளிகள், கோடுகளாகவும், கோடுகள் ஓவியங்களாகவும் உறுப்பெறுவதுபோல் சாதாரணமாக நினைத்து விட்டு விடும் இந்த செயல்பாடுகளால் பதியப்படும் ஒவ்வொரு பாவங்களும் மலைபோல் ஆகி நன்மைகளை முந்தி விடக்கூடாது என்பதால் தன்னை மீறிவிட்டப் பாவத்தைக் கழுவுவதற்கு அதற்கடுத்து விரைந்து நற்காரியமாற்ற வேண்டும்,

அன்றாடம் நம்மைக் கடந்து செல்லும் ஏனைய செயல்பாடுகளில் எது பாவகாரியம் என்று நம்மால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு கலாச்சார சீரழிவுகள் மலிந்து விட்டதால் சொந்த அலுவல்கள் போக எஞ்சிய நேரத்தை

Ø அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் நமக்கு ஏவிய அழைப்புப் பணியை மேற்கொள்வது, அதற்காக செலவு செய்வது,அதை செய்பவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் ஆலோசனைகள் மூலமாக உதவுவது,

Ø தர்ம காரியங்களில் ஈடுபடுவது,

Ø நம்முடைய பராமரிப்பிற்கு கீழுள்ளவர்களை முறையாக கவனிப்பது,

Ø நமக்கு கீழ்நிலையில் உள்ள பொதுமக்களின் மீது இறக்கம் கொண்டு பொதுநலப்பணிகளில் பங்கு வகிப்து.

போன்ற நற்காரியங்களில் அதிகம் ஈடுபட்டால் நன்மைகள் அதிகரிக்கும் தெரிந்து செய்யும் பாவங்களும், தெரியாமல் செய்யும் பாவங்களும் செயலிழக்கும். ...நன்மைகள் தீமைகளை அழித்து விடும். இது படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை. 11:114.

இறுதியாக இரண்டு செய்திகள்

* தீய காரியத்திற்கு பாவம் ஒன்று, அதையும் அதற்கடுத்து செய்யும் நற்காரியத்தில் ஈட்டும் நன்மையைக் கொண்டு அழித்து விடலாம் என்கின்ற அல்லாஹ்வின் அருட்கொடையை தவறாக பயன்படுத்த ( தீயசெயலை தாமாக விரும்பி செய்து விட்டு அதற்கடுத்து நற்செயல் என்று திட்டமிட்டு தொடருவதற்கு ) முயற்சிக்க கூடாது. சலுகையை சலுகையாக பயன்படுத்த வேண்டும், வரம்பு மீறக்கூடாது வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். ...இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.2:178

* அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் தீமைக்கடுத்து ஒரு நன்மையை செய்யும்படி கட்டளைப் பிறப்பித்திருப்பதால் அதற்கு முன் அட்வான்ஸாக செய்து அனுப்பிய நன்மைகளில் ஒன்றை எடுத்து புதிய பாவத்தை இறைவன் அழித்துக் கொள்ளட்டும் என்றுக் கருதி வெறுமனே இருந்து விடாமல் தீமைக்கடுத்து விரைந்து நற்செயல் ஒன்றை செய்தேயாக வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்...2:285 என்ற திருமறை வசனத்தை செயல்படுத்திய குர்ஆனிய சமுதாயாவோம்.

அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஏகத்துவம் மாத இதழ் ஆசிரியர்கள், மற்றும் ஆலோசனைக் குழுவினர்க்கு

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

திருந்தி, நம்பிக்கைகொண்டு பின்னர் நேர்வழியில் நடப்பவரை நிச்சயமாக நான் மன்னிப்பவானாக இருக்கிறேன் (20:82).

இறைவா! எங்களுக்கு சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதை பின்பற்றும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக!

இறைவா! அசத்தியத்தை எங்களுக்கு அசத்தியமாகக் காட்டி அதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் எங்களுக்கு அருள்வாயாக!

ஏகத்துவம் மாத இதழ் ஆசிரியர்கள், மற்றும் ஆலோசனைக் குழுவினர்க்கு கே.எஸ். ரஹ்மத்துல்லா இம்தாதி ஸலாமுடன் எழுதிக்கொள்வது,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்களின் ரமழான் மாத இதழின் 52-ம் பக்கம் ஜாக் பின்பற்றுவதுஎன்ற செய்திகளை படித்தேன். குர்ஆன், ஹதீஸ் அடிப்படிடையில் செயல்படுவதாக கூறும் உங்களின் நடையைக் கண்டேன். அதன் குறைகளை எழுதியாக வேண்டும் என்ற எண்ணம் வரவே இதை எழுதுகிறேன்.

ஜாக் பின்பற்றுவதுஇஸ்ரேல் காலண்டரோஎன்று எழுதிய நீங்கள் முதல்பிறையா? மூன்றாம் பிறையா?……. முஹம்மது (ஸல்) அவர்களையும்என்றும் எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு மறுப்பு எழுதும் நான் ஜாக்கில் அங்கம் வகிப்பதாலோ, அல்லது உங்கள் அமைப்பில் அங்கத்தினராக இல்லை என்பதாலோ இதை எழுதவில்லை. மாறாக, குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாட்களை கணிப்பதுதான் சரி என்ற கருத்தை ஆய்வு செய்ததால் எழுதுகிறேன். எனவே, நான் ஆய்வு குழுவில் கலந்து கொண்டு தெளிவுபெற்ற விஷயத்தை தாங்கள் கவனத்திற்க்கு கொண்டு வருகின்றேன். அதனை படித்துவிட்டு நிதானமாக பதில் தாருங்கள்.
அதற்கு முன்னால் உங்களை அறியாமலேயேஒரு விஞ்ஞானியாக சிந்தித்தால் சிரிப்பு வருகின்ற ஒரு தத்துவத்தை 54-ம் பக்கத்தில் பிறை பார்க்கும் விஷயத்தில் யாரும் காலண்டரைப் பார்த்து முடிவு செய்வது கிடையாது.. ஸஹீஹான ஹதீஸ்கள்கூட குர்ஆனுக்கு (உங்கள் சிந்தனையில்) மோதுவதாக இருந்தால் எடுத்துக்கொள்ளக் கூடாது, ஸஹாபாக்களை பின்பற்றக்கூடாது என்றும், அப்படிச் சொல்பவர்கள் மத்ஹப் வாதி என்றெல்லாம் குறிப்பிடுகின்ற நீங்கள் உமர் (ரலி) அவர்களின் கருத்தையும் உங்களுக்கு ஆதார பலமாக இழுத்துக்கொண்டீர்கள். உங்களைக் கேட்கிறேன், நோன்பிற்கும், பெருநாளுக்கும் காலண்டரைப் பார்த்து முடிவு செய்வதில்லை என்று எழுதியிருக்கிறீர்களே!

பிறை பார்த்துதான் நோன்பும், பெருநாளும் வைக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு தெளிவும், உறுதியும் இருந்தால் காலண்டரை எப்படி நீங்கள் அச்சிட்டீர்கள்? காலண்டர் என்றாலே 12 மாதங்கள் அடங்கியதுதானே! அந்த 12-ல் உள்ளதுதானே நோன்பும், பெருநாளும்.

பிறை பார்த்துத்தான் நோன்பும், பெருநாளும் மட்டும் முடிவு செய்வது என்றிருந்தால் உங்களின் இயக்கத்தின் விளம்பரத்துடன் ஹிஜ்ரி காலண்டர் எப்படிப் போட்டீர்கள்? மாதம் மாதம் பிறை பார்த்து வந்தால்தானே ரமழானைக் கண்டுபிடிக்க முடியும். உங்களுக்கு நீங்களே முரண்படுவது உங்களுக்குப் புரியவில்லையா? மட்டுமின்றி உங்கள் பார்வையில் நோன்பும் பெருநாளும் மட்டும்தான் பிறைபார்க்க வேண்டுமென்றால் மாதம் மாதம் 13, 14, 15 ஆகிய அய்யாமுல் ஃபீழ் நோன்பை எப்படி நோற்பது, துல்ஹஜ் 8-ம் நாள் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்ட எதைப்பார்ப்பது? அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அதுபோன்று அவசரத்தில் கைபோன போக்கில் எழுதித் தள்ளியிருக்கிறீர்கள்.

அன்றாட முஸ்லிம் நாட்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நோன்பிற்கும், பெருநாளுக்கும் ஹிஜ்ரா அடிப்படையில் நாட்காட்டி போடுபவர்களை யூதயிசம், ஷியாயிசம் என்று எழுதியிருந்தீர்கள். நீங்கள் அல்லவா, அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இழிவுபடுத்தியுள்ளீர்கள் (நஊதுபில்லாஹ்).

விஷயத்திற்கு வருகிறேன்
நான்கைந்து ஆண்டுகளாக, நோன்பிற்கும், பெருநாளுக்கும் முஸ்லிம்கள் அன்றாட நாட்களை அறிந்து கொள்வதற்கும் காலண்டர் தயார் செய்தது யூதயிசமல்ல. தூய இஸ்லாமிய இசம்.. இதை நான் உங்களைப்போன்று……… கூறாமல், குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படை ஆதாரமாக வைத்துக்கூறுகிறேன்.

அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் ஆக்கினான். சந்திரனுக்கு பல படித்தரங்களை நிர்ணயித்தான், எனெனில் நீங்கள் பல ஆண்டுகளையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக. (10:5)

அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பண்ணிரண்டாகும்…’ (9:36)

சூரியனும் சந்திரனும், அதற்குரிய கணக்கின்படி சுழல்கின்றன (55:5)

முஹம்மதே! ஆவர்கள் பிறைபற்றி உம்மிடம் கேட்பார்கள், அவை மக்களுக்கு நாட்காட்டிகளாகும், மேலும் ஹஜ்ஜுக்குரிய (நாள்காட்டும்) என்று நீர் கூறுவீராக…’ (2:187)

நிச்சயமாக நாங்கள் எழுதப்படிக்கத் தெரியாத, கணக்குப்பார்க்கத் தெரியாத சமூகமாகும். எனவே மாதம் என்பது 29 அல்லது 30 நாள்கள் என கைகளை சைகை செய்து காட்டினார்கள் (புஹாரி)

எல்லாக் காலங்களிலும் சத்தியத்தை குர்ஆன், ஹதீஸ் வழியாக சரியாக ஆய்வு செய்யாத காலங்களில் மக்கள் ஒரே அணியாகவே இருந்து வந்திருக்கிறார்கள். குர்ஆன், ஹதீஸை சரியாக ஆய்வுசெய்து, விஷயங்களை முன்வைக்கும்போது, அவர்கள் அநாதைகளாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். நாம் தவ்ஹீதை, ஷிர்க்கை, சுன்னத்தை, பித்-அத்தை குர்-ஆன் ஹதீஸ் தெளிவில் எடுத்து வைத்தபோதும் நாமும் படு அநாதைகளாக இருந்தோம் என்பதெல்லாம் எப்படியோ, யாராலோ உங்களை மறக்க வைத்துள்ளது. குர்ஆன், ஹதீஸ் ஆய்வில் அநாதை ஆக்கப்படும் கருத்துத்தான் பிரச்சனையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்க!

1. நபி(ஸல்) அவர்கள் பிறையை எப்போது, எங்கு எப்படிப்பார்த்தார்கள்?
2. ஸஹாபாக்கள் ரமழானுக்கும் மட்டும் பெருநாளுக்கும் மட்டும் பிறையை எப்போது எங்கு பார்த்தார்கள்?
3. பிறை எங்கே உதிக்கிறது?. எங்கே மறைகின்றது?
4. ஹிஜ்ரா காலண்டரை நமதூரில் தயாரித்தவர்கள் யார்?
5. பிறையை பார்க்க வேண்டும் என்ற நீங்கள் எப்படி காலண்டர் போடுவதை சரி காண்கிறீர்கள்?
6. நீங்கள் சந்திரக் கணக்கை காலண்டரில் போட்டிருப்பது எந்த அடிப்படையில்?
7. மேகமூட்டம் ஏற்பட்டால்என்றால் எப்போது அது?
8. மேகமூட்டம் இல்லாமலிருந்தால் மாதம் எப்படி முடிவு செய்வது?
9. மாதம் 29 எப்போது? 30 எப்போது? என்று எப்படி முடிவு செய்வது?
10. ஷஃபானில் 29-ல் மட்டும் எப்படி நீங்கள் ஷஃபானை 29 என்று முடிவு செய்வீர்கள்?

அல்லாஹ் மிக அறிந்தவன்

அன்புடன் கே.எஸ். ரஹ்மத்துல்லாஹ்
சௌதி அரேபி

இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
- இஸ்மாயில் ஸலபி
இல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும். ஏனெனில், பசுமையான பூமியில் தான் பயிர் பச்சகைள் விளையும். கறடு முறடான பூமி முற்புதர்களையும் களைகளையும் தான் முளைக்கச் செய்யும். எனவே, இல்லறம் குறித்த நல்ல வழிகாட்டல் தேவை. அந்த வழி காட்டல்களை இஸ்லாம் இனிதே வழங்குகின்றது.
அல்குர்ஆன் பல விடயங்களை உதாரணங்கள் மூலமாகவும், உவமானங்கள் மூலமாகவும் விளக்குவதுண்டு. அவ்வகையில் “ஆடை” என்ற ஒப்புவமையை இரவு, இறையச்சம் என்பவற்றுக்கு அல்குர்ஆன் உவமிக்கின்றது. இவ்வாறே கணவன் மனைவி என்கிற உறவையும் இஸ்லாம் ஆடைக்கு ஒப்பிடுகின்றது.
“(மனைவியர்களான) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், (கணவர்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்”. 2:187
மேற்படி வசனம் கணவனை மனைவியின் ஆடை என்றும் மனைவியைக் கணவனின் ஆடை என்றும் கூறுகின்றது. மேற்கத்தேய நாடுகளில் ஆடை மாற்றுவது போல் தமது சோடிகளை மாற்றுவதை இதற்கு நாம் விளக்கமாகக் கொள்ள முடியாது. நாம் ஆடை விடயத்தில் கடைப்பிடிக்கும் நோக்குகள் குறித்து நிதானமாகச் சிந்தித்தால் “ஆடை” என்ற உவமானம் கணவன் மனைவி உறவுக்கு எவ்வளவு தூரம் ஒத்துப்போகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆடை மானம் காக்கும், அவள் கற்பைக் காப்பாள் ஆடை அணிவதன் அடிப்படை நோக்கம் மானத்தை மறைப்பதாகும். ஆடை இல்லாதவன் அவமானப்பட நேரிடும். இல்லறத்தின் அடிப்படை நோக்கம் கற்பைக் காப்பதாகும். அது இல்லா தவன் கற்புத் தவறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.
“இளைஞர்களே! உங்களில் வாய்ப் புள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், அது பார்வையைத் தாழ்த்தச் செய்யும், கற்பைக் காக்கும்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம்:திர்மிதி, நஸஈ, அபூதாவூத், இப்னு மாஜா
வாழ்க்கைத் துணையில்லாத நிலை ஆடையற்ற வாழ்வுக்குச் சமனாகும். எனவே, ஆடை அணியத் தயாராகுங்கள்.
ஆடைத் தெரிவு :
நாம் ஆடையைத் தெரிவு செய்யும் போது பலவிதமான அம்சங்களைக் கவனத்தில் கொள்கின்றோம். எமக்கு ஆடை அளவாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றோம். அன்றாடம் கூலித் தொழில் செய்யும் ஒருவன் ஆயிரக்கணக்குப் பெறுமதியான ஆடைகளைத் தெரிவு செய்வதில்லை. தன் வருமானத்திற்கு ஏற்றதாக ஆடையைத் தெரிவு செய்கின்றான்.
இவ்வாறே எமது தகுதிக்குத் தக்கதாக ஆடையைத் தெரிவு செய்கின்றோம், மூட்டை சுமக்கும் ஒருவர் கோட் சூட்டைத் தெரிவு செய்யமாட்டார். தெரிவு செய்தாலும் அதற்கேற்ற வாழ்க்கை அவரால் வாழ முடியாது. சாதாரணமாக கோட் சூட் அணிந்த ஒருவனால் மக்கள் நிரம்பி வழியும் போது வாகனத்தில் பயணிக்க முடியாது. சொந்தமாக வாகனம் பிடித்துச் செல்ல வேண்டும். ஒரு பிச்சைக்காரன் தட்டை நீட்டினால் கூட தான் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ப உதவி செய்ய நேரிடும்.
அடுத்து எமது நிறம், தொழில் என்பவற்றுக்கெல்லாம் தோதான ஆடையையே தெரிவு செய்கின்றோம். ஒரு ஆடைத் தெரிவுக்கே இவ்வாறான முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்றால் வாழ்க்கைத் துணை எனும் ஆடையைத் தெரிவு செய்ய இதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக அவதானம் செலுத்த வேண்டும்.
சிலர் தமது தகுதிக்கு மீறி பணக்கார பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அதற்கேற்ப வாழ முடியாமல் விழி பிதுங்கி நிற்பதை நாம் அனுபவ வாயிலாக கண்டு வருகின்றோம். அந்தப் பெண் பணக்கார வாழ்வுக்குப் பழக்கப்பட்டிருப்பாள், அவளது தகுதிக்கு ஏற்ப செலவு கொடுக்க முடியாமல் இவன் திண்டாடுவான். அந்தப் பெண் பணக்கார நட்புகளை ஏற்படுத்தியிருப்பாள். எந்த பணக்கார நட்புக்களுடனும் உறவுகளுடனும் இணைந்து செல்ல முடியாமல் இவன் திண்டாடுவான். இவன் வீட்டு விஷேசங்களுக்குப் பணக்காரர்களை அழைக்க நேரிடும். அவர்கள் அவர்களது தகுதிக்கு ஏற்ப அன்பளிப்புக்கள் வழங்குவர். அதேபோன்று அவர்கள் தமது விஷேசங்களுக்கு இவனுக்கு அழைப்பு விடுப்பர். இவன் தனது தகுதிற்கு ஏற்ப அன்பளிப்பு வழங்க முடியாது என்று கௌரவப் பிரச்சினை பார்ப்பான். மனைவியின் தகுதிக்கு ஏற்ப அன்பளிப்பு வழங்க பொருளாதாரம் இடம் கொடுக்காது. இவ்வாறான இக்கட்டுக்களுடன் வாழும் ஒருவனது இல்லறம் இனிமையானதாக இருக்காது. எனவே, மனைவி கணவன் எனும் ஆடையைத் தெரிவு செய்யும் போது மிகுந்த நிதானம் தேவை.
“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவையாவன ;
அவளது பணத்திற்காக,
அவளது குடும்ப கௌரவத்திற்காக,
அவளது அழகிற்காக,
அவளது மார்க்க விழுமியங்களுக்காக.
நீர் மார்க்க முடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாது காத்துக்கொள்வாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே, அழிவிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள மார்க்கமுடைய துணையைத் தெரிவு செய்வோமாக!
ஆடையில் அழகும் அந்தஸ்தும் :
மானத்தை மறைப்பதுதான் ஆடையின் அடிப்படை அம்சம்! எனினும் ஆடையைத் தெரிவு செய்யும் போது வெறுமனே அவ்ரத்தை மறைப்பதை மட்டும் நாம் கவனிப்பதில்லை. அந்த ஆடை எமக்கு அழகைத் தரவேண்டும் என்று விரும்புகின்றோம். அதன் மூலம் எமது உடல் சூடு, குளிரில் இருந்து பாதுகாப்புப் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆடையின் மூலம் அந்தஸ்தை, மகிழ்ச்சியை என பல அம்சங்களையும் நாம் எதிர் பார்க்கின்றோம்.
இல்லற ஆடையாகிய வாழ்க்கைத் துணைக்கும் இந்த அம்சங்கள் பொருந்தும். வெறுமனே பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் அமைப்பது மட்டும் இல்லறத்தின் நோக்கமல்ல. அங்கே மகிழ்ச்சி நிலவ வேண்டும், கணவன் எனும் ஆடை மூலம் மனைவியும், மனைவி எனும் ஆடை மூலம் கணவனும் சமூகத்தில் பாதுகாப்பையும், அலங்காரத்தையும், அந்தஸ்த்தையும் அடைய வேண்டும். இவர் என் கணவர் என்று சொல்வதன் மூலம் ஒரு பெண்ணுக்கு பாதுபாப்பும், அந்தஸ்த்தும் மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும். இவன்தான் உன் கணவனா(?) என்ற ரீதியில் அவள் அவமானத்தையோ, அசிங்கத்தையோ, இவனின் மனைவி என்றால் எப்படிவேண்டுமானாலும் வளைத்துப் போடலாம் என்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையையோ ஒருபெண் சம்பாதிக்கக் கூடாது.
அவ்வாறே, இவளா உன் மனைவி(?) வேறு ஆள் கிடைக்க வில்லையா? என்ற தோரணையில் ஒரு கணவன் நோக்கப்படும் விதத்தில் மனைவியின் செயல்பாடு அமைந்து விடக்கூடாது.
இவ்வாறே, ஆடை அழகையும், அந்தஸ்தையும் அபயமற்ற நிலைமையையும் தர வேண்டும்.
ஆடையின் தன்மையறிந்து பணி செய்வோம்!
நாம் வெள்ளை நிற ஆடை அணிந்து வயலில் வேலை செய்ய மாட்டோம். மென்மையான ஆடையணிந்து கடின பணிகளில் ஈடுபடமாட்டோம். விளையாட்டுக்கு, வீட்டு வேலைக்கு, ஆலயத்திற்கு, தொழில் செய்வதற்கு என பணிகளுக்கு ஏற்ப ஆடை அணிகின்றோம். ஆடையின் தன்மையறிந்தே செயல்படுகின்றோம். இவ்வாறே இல்லறம் இனிமையாக அமைய வாழ்க்கைத்துணை எனும் ஆடை பற்றிய அறிவும் அதற்கேற்ற செயற்பாடும் அவசியமாகும்.
இல்லற வாழ்வில் இணைந்த இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவரின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து, விட்டுக் கொடுத்து அல்லது விட்டுப்பிடித்து செயல்பட அறிந்து கொள்ள வேண்டும்.
சில கணவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு, தேநீர் இல்லாவிட்டால் கோபம் வரும். சிலருக்கு ஆடைகள் ஒழுங்காக கழுவப்படாவிட்டால் பிடிக்காது. சில பெண்களுக்கு கணவன், தன் குடும்பத்தவர் பற்றிய குறைகளைப் பேசினால் பிடிக்காது. இவ்வாறான பல பிடிக்காத விடயங்கள் இருக்கும். இவற்றைப் புரிந்து, தவிர்ந்து கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். ஒருவர் நெருப்பானால் மற்றவர் பஞ்சாகாமல் நீராக இருக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு ஆடையை அறிந்து செயல்படும் பக்குவம் இன்பமான இல்லறத்திற்கு இன்றிய மையாததாகும்.
ஆடையின் குறையை மறைப்போம்:
எமது ஆடையில் ஏதேனும் அழுக்கோ, அசிங்கமோ பட்டுவிட்டால், அல்லது ஏதேனும் கிழிவுகள் ஏற்பட்டுவிட்டால் எமது கௌரவத்திற்காக அதை மறைக்கவே முயல்வோம். அழுக்குப்பட்ட பகுதி வெளியில் தெரியாமல் அணியமுடியுமாக இருந்தால் அதை அப்படியே அணிவோம். இல்லற ஆடையையும் இப்படித்தான் நாம் கையாள வேண்டும். என் கணவர் மோசம், அவர் சரியில்லை. கருமி, முன்கோபக்காரர், மூர்க்கமாக நடப்பவர் என்று மனைவியோ, அவள் சரியில்லை ஒழுக்கமில்லாதவள், ஒழுங்காகப் பேசவோ, நடக்கவோ, சமைக்கவோ தெரியாதவள், ஆணவக்காறி, அடங்காப்பிடாரி என்று கணவனோ வாழ்க்கைத் துணை எனும் ஆடையை அசிங்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.
ஆடையில் அழுக்குப்பட்டால் :
நாம் எவ்வளவுதான் நிதானமாக நடந்தாலும் எமது ஆடையில் அழுக்குப்படவே செய்யும். அது கசங்கிப்போகும். அதற்காக அதை கழற்றி எறிந்தா விடுகின்றோம். அழுக்கு நீங்கக் கழுவி, மடிப்பு நீங்க அயன் பண்ணி மீண்டும் அணிந்து கொள்கின்றோம். ஏன் சின்னச் சின்ன கிழிசல்களைக் கூட தைத்து மறுபடியும் அணிந்து கொள்கின்றோம்.
இவ்வாறுதான் வாழ்க்கை வண்டி நகர நகர புதிய புதிய பிரச்சினைகள் புற்றீசல் போல் கிளர்ந்து வரலாம். அவை எமது தவறான அணுகு முறைகளால் பூதாகரமாகக் கூட மாறிப் போகலாம். இச்சந்தர்ப்பங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றாற்போல் செயல்பட்டு இல்லற ஆடையைக் கழற்றி எறிந்து விடக் கூடாது. அழுக்குப்பட்டால் கழுவுவது போல், நொறுங்கிப் போனால் அயன் பண்ணுவதுபோல், கிழிந்தால் தைத்துக்கொள்வது போல் சமாளித்துப் போகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு “முஃமினான ஆணும் (தன் மனைவியான) முஃமினான பெண்ணிடம் காணப்படும் சிறு சிறு குறைகளுக்காக அவளைப் பிரிந்துவிட வேண்டாம். அவளிடம் ஏதேனும் ஒன்றை அவர் வெறுத்தால் அவளிடம் இருக்கும் நல்லதைக் கண்டு திருப்தியுறட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் இதனையே கூறியுள்ளார்கள்.
ஆடையே அவமானமாக மாறல் :
ஆடையில் அழுக்கு நீக்குவது போல் இல்லற ஆடையின் குறைநீக்க இஸ்லாம் வழி கூறுகின்றது.
ஒரு பெண்ணிடம் கணவன் குறைகாணும் போது பின்வரும் வழிமுறைகளையே கையாள வேண்டும்.
01. இதமாக எடுத்துக்கூற வேண்டும். இதனால் அவள் திருந்தவில்லையாயின்
02. படுக்கையை வேறாக்கி அவளை உளவியல் ரீதியாக திருத்த முற்பட வேண்டும். அதனாலும் மாற்றம் ஏற்படவில்லையானால்
03. காயம் ஏற்படாதவாறு இலேசாக அடித்து விவகாரம் விகாரமாகிச் செல்வதை உணர்த்த வேண்டும்.
04. இதுவும் பயன்தராத பட்சத்தில் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் இருவரிடம் விபரத்தைக்கூறி சுமூகமாக தீர்வு காண முயல வேண்டும்.
இதையும் தாண்டிவிட்டால் இருவரும் இனிமையாக இல்லறம் நடத்த முடியாது என்பது உறுதியாகும் போதும் மட்டும் தான் “தலாக்” என்கிற இறுதிக்கட்டத்திற்கு வர வேண்டும்.
ஒருவன் அணிந்த ஆடையே அவனுக்கு அவமானத்தை தருகின்றது என்றால், மானத்தை மறைப்பதற்குப் பதிலாக மானபங்கப் படுத்துகின்றது என்றால், அழகுக்குப் பகரமாக அசிங்கத்தையும், கௌரவத்திற்குப் பகரமாக அவமானத்தையும் தருகின்றது என்றால் அவன் அதைக் களற்றிப்போடுவதே சிறந்ததாகும். இந்த உரிமையை இஸ்லாம் பெண்களுக்கும் வழங்கியுள்ளது. ஆனால், சிலர் துரதிஷ்ட வசமாக இறுதி முடிவையே ஆரம்பத்தில் எடுத்து வருவது தான் ஆச்சரியமாகவுள்ளது.