Share

Tuesday, January 4, 2011

ஹேமந்த் கர்கரேவுடனான உரையாடல்: ஆதாரங்களை வெளியிட்டார் திக்விஜய் சிங்

புது தில்லி,ஜன.4: பயங்கரவாதத் தடுப்புப் படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்.
இருவரும் தொலைபேசியில் பேசியது குறித்த ஆதாரங்களை போபால் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து பெற்ற திக்விஜய் சிங், தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஆதாரத்தின் மூலம் அவருடன் ஹேமந்த் கர்கரே உரையாடியது உறுதியாகியுள்ளது. திக்விஜய் சிங்கின் 9425015461 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு ஹேமந்த் கர்கரே பேசியுள்ளார். அவர் தனது அலுவலகத் தொலைபேசியில் இருந்து பேசியுள்ளார். இருவரும் சுமார் 17.44 மணி நேரம் பேசியுள்ளனர். மும்பை தாக்குதல் நடைபெறுவதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாகவும் 6 நிமிடம் இருவரும் உரையாடியுள்ளனர்.
ஆதாரங்களை வெளியிட்டுப் பேசிய திக்விஜய், இந்த விஷயத்தில் அமைச்சர் பாட்டீல் உள்பட தன்னை யாரெல்லாம் அவதூறாகப் பேசினார்களோ அவர்கள் அனைவரும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியது: பயங்கரவாதத் தடுப்புப் படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே என்னை தொலைபேசியில் பல தடவை தொடர்பு கொண்டு பேசினார் என்பதையும், இந்து தீவிரவாதிகளிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் குறிப்பிட்டதையும் தெரிவித்தேன். ஆனால் எனது பேச்சை சிலர் ஏற்க மறுத்து என்னை கண்டபடி விமர்சனம் செய்தனர்.
மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் என்னை அவதூறாகப் பேசினார். என்னை ஒரு தேசத் துரோகி, பாகிஸ்தான் ஏஜென்ட், பொய்யர் என்றெல்லாம் சட்டப் பேரவையிலேயே விமர்சித்தார். ஹேமந்த் கர்கரே என்னிடம் தொலைபேசியில் பேசவில்லை என்று மகாராஷ்டிர போலீஸôரும் தெரிவித்தனர். நான் ஏதோ பொய் சொல்வதுபோல் அவர்களும் சித்திரித்தார்கள். அவர்களின் இந்த நடவடிக்கை என்னை மனதளவில் பெரிதும் பாதித்தது.
அதனால்தான் எனது நேர்மை குறித்து நிரூபிக்கும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளேன். ஹேமந்த் கர்கரே என்னிடம் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களை இப்போது வெளியிட்டுள்ளேன். என்னை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள். அவர்கள் அனைவரும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிக்க வேண்டும் என்று திக்விஜய் சிங் வலியுறுத்தினார்.
மலேகாவ் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய இந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலரை ஹேமந்த் கர்கரே கைது செய்தார். இதைத்தொடர்ந்து நாட்டில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழவில்லை. இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைதுக்குப் பின்னர் புணேயில் ஜெர்மன் பேக்கரியிலும், வாராணசியில் மட்டுமே குண்டுகள் வெடித்தன.
இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று அவர் வினவினார்.
மும்பை தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் நடத்தினார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இதுவரை இந்தியாவில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் அனைத்தையும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டும் என்றும் திக்விஜய் சிங் வலியுறுத்தினார்.
மும்பை தாக்குதலில் இறந்த பயங்கரவாதத் தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே தன்னை அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது இந்து அமைப்புகளிடம் இருந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் சமீபத்தில் தெரிவித்தார். tks dhinamani

0 கருத்துரைகள்: